எந்த அறக்கட்டளையிலும் நான் பொறுப்பில் இல்லை - அமைச்சர் எ.வ.வேலு

எங்களை முடக்குவதற்காகவே வருமானவரித்துறை சோதனை நடைபெற்றதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.;

Update:2023-11-07 23:22 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சூழைல் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 5வது நாளாக இன்றும் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அமைச்சர் எ.வ.வேலுவின் மகனுடைய வீட்டிலும் சோதனை நடைபெற்றது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு புகார் அடிப்படையிலும் இந்த சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எங்களை முடக்குவதற்காகவே வருமானவரித்துறை சோதனை நடைபெற்றதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "எங்களை முடக்குவதற்காகவே வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. எனக்கு தொடர்புடைய இடங்களில் ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை. எங்களை பொறுத்தவரை நாங்கள் சட்டப்படி நடந்துகொள்வோம். ஏற்கனவே 2 நாள் என் வீட்டில் ரெய்டு நடத்தியதால் 2 நாட்கள் என் பணிகளை செய்ய முடியவில்லை.

உதயநிதி ஸ்டாலின் சொன்னது போல பாஜனதாவில் ஒரு அணியாக வருமான வரித்துறை உள்ளது. எங்களை முடக்குவதற்காகவே இந்த சோதனை நடைபெற்றது. தனிப்பட்ட முறையில் என் பெயரை கலங்கப்படுத்த பல பேர் முயற்சி செய்கிறார்கள். அது எந்த காலத்திலும் நடக்காது. என்னை பொறுத்தவரை நான் நேர்மையானவனாக, எனது மனசாட்சிக்கு பயந்தவனாக எப்போதும் கட்டுப்பட்டு இருக்கிறேன். எந்த அறக்கட்டளையிலும் நான் பொறுப்பில் இல்லை" என்று அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்