தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஹைட்ரஜன் உற்பத்தி பூங்கா அமைக்க நடவடிக்கை- துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தகவல்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஹைட்ரஜன் உற்பத்தி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தெரிவித்தார்

Update: 2022-08-15 18:09 GMT

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஹைட்ரஜன் உற்பத்தி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சுதந்திர தினவிழா

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் இந்திய சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை, துறைமுக தீயணைப்பு படை, துறைமுக பள்ளி தேசிய மாணவர் படை, துறைமுக பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

ஹைட்ரஜன் பூங்கா

பின்னர் அவர் பேசும் போது, தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் கடந்த நிதியாண்டு 34.12 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு 7.33 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு பாராட்டுக்கள். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை இந்தியாவின் கிழக்கு கடலோர சரக்கு பெட்டக பரிமாற்ற முனையமாக மாற்றுவதற்கு ஏதுவாக இந்த துறைமுகம் ரூ.7 ஆயிரத்து 164 கோடி மதிப்பீட்டில் சுமார் 1000 மீட்டர் நீளம் கொண்ட 2 தளங்களுடன் கூடிய வெளிதுறைமுக திட்ட வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. வ.உ.சி. துறைமுகத்தில் மரபுசாரா எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையில் ஹைட்ரஜன் உற்பத்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது, என்று கூறினார்.

மேலும் சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு வ.உ.சி. துறைமுகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இருந்தன. விழாவில் கடந்த கல்வியாண்டில் துறைமுக பள்ளிக்கூடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர்.

விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்