மனைவியை எரித்து கொல்ல முயன்ற கணவருக்கு 7 ஆண்டு சிறை குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு
களியக்காவிளை அருகே மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
களியக்காவிளை,
களியக்காவிளை அருகே மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
பணம் கேட்ட தகராறு
களியக்காவிளை அருகே உள்ள வன்னியூர் தெற்றிக்குழியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது41). இவரது மனைவி வினிதா. கிறிஸ்டோபருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. மேலும் வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி மனைவி வினிதாவிடம் மது குடிக்க பணம் கேட்டார். அப்போது வினிதா தன்னிடம் பணம் இல்லை எனக்கூறினார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கிறிஸ்டோபர் மனைவி வினிதா மீது மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றார். இதில் வினிதா படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
7 ஆண்டுகள் சிறை
இதுகுறித்த புகாரின் பேரில் கிறிஸ்டோபர் மீது பளுகல் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை குழித்துறை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த குழித்துறை செசன்ஸ் கோர்ட்டு சார்பு நீதிபதி சரவணபவன், குற்றம்சாட்டப்பட்ட கிறிஸ்டோபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து கிறிஸ்டோபர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.