நண்பர்களுடன் சேர்ந்து பெண் போலீசின் கணவர் கைவரிசை

நண்பர்களுடன் சேர்ந்து பெண் போலீசின் கணவர் கைவரிசை

Update: 2023-07-30 16:37 GMT

திருப்பூர்

திருப்பூரில் கத்திமுனையில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த சம்பவத்தில் பெண் போலீசின் கணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கைவரிசை காட்டி இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 2 பேர் போலீசில் சிக்கினர்.

கோவை பெண் போலீசின் கணவர் உள்பட5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடையில் கொள்ளை

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஹஜ் மந்த்சிங். இவர் திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருப்பூர் மத்திய பஸ்நிலையம் பின்புறம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையில் ஹஜ் மந்த்சிங் தனியாக இருந்தபோது முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென கடைக்குள் புகுந்தனர். அவர்கள் ஹஜ் மந்த்சிங்கை கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி கடையில் இருந்த ரூ.16 லட்சம் மற்றும் 4 செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

பின்னர் ஏற்கனவே வெளியே நின்று கொண்டிருந்த 3 பேருடன் 7 பேர் கொண்ட கும்பல் காரில் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கொள்ளை நடந்த கடை மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர்.

போலீசார் விசாரணை

மேலும் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கொள்ளை கும்பல் வந்த கார் திருப்பூர்-பல்லடம் ரோடு வித்யாலயம் பகுதியில் கேட்பாரற்று நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் காரின் பதிவு எண்ணை கொண்டு நடத்திய விசாரணையில் திருப்பூரை சேர்ந்த சக்திவேல் என்பவரின் கார் என்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் பெண் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறி அந்த கும்பல் வாங்கி சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் வித்யாலயம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் பார்வையிட்டபோது கொள்ளை கும்பல் பணப்பையுடன் அங்கிருந்து தப்பிச் செல்வது பதிவாகி உள்ளது. விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இதில் ஒருவர் கோவையில் பணியாற்றும் பெண் போலீசின் கணவர் என்றும் கூறப்படுகிறது.

2 பேர் சிக்கினர்

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் மதுரையில் போலீசாரிடம் சிக்கினார்கள். அந்த 2 பேரிடமும் பணம் எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்ற மேலும் 5 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கொள்ளை நடந்த கடையில் பணம் இருந்தது எப்படி கொள்ளையர்களுக்கு தெரிந்தது? ஏற்கனவே அந்த கடையை கண்காணித்து திட்டம் தீட்டி கொள்ளையடித்தார்களா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் பிடியில் சிக்கிய 2 பேரிடம் விசாரணை நடத்திய பின்னரே, மற்ற 5 பேர்களின் விபரங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்