அம்பத்தூர் அருகே மனைவியை அடித்துக்கொன்ற கணவர்
போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்ததால் ஆத்திரத்தில் மனைவியை அடித்துக்கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.;
சென்னை அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு, அன்னை நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 55). இவருடைய மனைவி ரேவதி (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.
கூலித் தொழிலாளியான வேலாயுதம் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.
இதனால் வேலாயுதத்தை அப்பகுதியில் உள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு 6 மாத சிகிச்சைக்கு பிறகு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலாயுதம் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வந்தார்.
ஆனால் வீட்டுக்கு வந்த வேலாயுதம், மீண்டும் குடித்துவிட்டு வந்து மனைவி ரேவதியுடன் தகராறு செய்து வந்தார். தன்னை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து பழிவாங்குவதாக கூறினார்.
நேற்று முன்தினம் இரவும் மதுபோதையில் வீட்டுக்கு வந்த வேலாயுதம், இது தொடர்பாக மனைவி ரேவதியுடன் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த வேலாயுதம், ரேவதியை கைகளால் சரமாரியாக தாக்கி தள்ளிவிட்டார். இதில் சுவரில் மோதிய ரேவதி, தலையில் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார், கொலையான ரேவதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை அடித்துக்கொன்றதாக வேலாயுதத்தை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.