குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு கணவர் தற்கொலை

குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்த கணவர், மனைவி இறந்து விடுவாளோ? என்ற பயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-05 22:32 GMT

பட்டாபிராம்,

ஆவடியை அடுத்த பட்டாபிராம் மசூதி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 46). இவர், மசூதி தெருவில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி கவுதமி (36). இவர்களுக்கு சீனிவாசன் (16), ஆகாஷ் (14) என 2 மகன்களும், பவித்ரா (12) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் பிள்ளைகள் 3 பேரும் தூங்கிய பிறகு கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், சமையல் அறையில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து தனது மனைவி கவுதமியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் கொட்டியதால் கவுதமி அலறி துடித்தார்.

கணவர் தற்கொலை

தாயின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவருடைய மூத்த மகன் சீனிவாசன் எழுந்து வந்து பார்த்தார். உடனடியாக தனது தாயார் கவுதமியை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவருக்கு கழுத்தில் 15 தையல்கள் போடப்பட்டது.

இதற்கிடையில் மனைவியின் கழுத்தை அறுத்து விட்டதால் ஒருவேளை இறந்து விடுவாளோ? என்ற பயத்தில் வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின் விசிறி கொக்கியில் மணிகண்டன் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த கவுதமி, தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்