மேலகிருஷ்ணன்புதூர்:
நாகர்கோவில் அருகே உள்ள என்.ஜி.ஓ. காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் அசித்திராம் பிரதீப் (வயது33). சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வெட்டூர்ணிமடம் அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த சுவிதா கண்ணன் (28) என்பவருக்கும் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுபிதா கண்ணன் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பிறகு அவர்கள் என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் அசித்திராம் பிரதீப்புக்கு கடன் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. எனவே அவர் மனைவியிடம் 'உனது தந்தையின் வீட்டு மனையை எனக்கு எழுதி தர வேண்டும்' என்று கூறி தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று தகராறு செய்த அசித்திராம் பிரதீப் தகாத வார்த்தைகள் ேபசி, மனைவியை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த சுவிதா கண்ணன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கிருந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அசித்திராம் பிரதீப் மீது சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வ சிங் பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.