மணமக்கள் சென்ற கார் மோதி கணவன்-மனைவி பலி

கடலூர் அருகே மணமக்கள் சென்ற கார் மோதி கணவன்-மனைவி பலியாகினர்.;

Update: 2023-08-20 19:41 GMT

குள்ளஞ்சாவடி,

புதுமனை புகுவிழா

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 52). டி.வி. மெக்கானிக். இவரது மனைவி விஜயா. இவர்களது மகன் சுமனுக்கு அடுத்த மாதம்(செப்டம்பர்) 3-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இதையொட்டி இருவீட்டாரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே நேற்று செல்வராஜ் புதிதாக கட்டப்பட்ட வீட்டின் புதுமனை புகுவிழா நடைபெற்றது. விழா முடிவடைந்ததும் செல்வராஜ் மற்றும் விஜயா ஆகியோர் கடலூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஒரு மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டனர்.

மணமக்கள் சென்ற கார் மோதல்

இதேபோல் புதுச்சேரியில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள் குருபிரியன், தமிழ்கொடி மற்றும் உறவினர்கள் சிலர் காரில் மணமகனின் சொந்த ஊரான சோழத்தரம் அருகே உள்ள மாமங்கலம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். காரை கோபாலகிருஷ்ணன் ஓட்டினார்.

கடலூர் அடுத்த சுப்பிரமணியபுரத்தில் செல்வராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது, மணமக்கள் வந்த கார் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டதில் செல்வராஜ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விஜயா, புதுமண தம்பதி குருபிரியன், தமிழ்கொடி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

பலி

இதுபற்றி தகவல் அறிந்ததும் குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜயா பரிதாபமாக உயிரிழந்தார். குருபிரியன் உள்ளிட்ட 3 பேர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்