துக்க வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்த போது லாரி மோதி கணவன்- மனைவி சாவு
மல்லூர் அருகே துக்க வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்த போது லாரி மோதி கணவன்- மனைவி பலியானார்கள்.
பனமரத்துப்பட்டி:
கணவன்- மனைவி
சேலம் கன்னங்குறிச்சி செட்டிசாவடி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (வயது 36). வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி கலைவாணி (30). கணவன்- மனைவி இருவரும் நேற்று மதியம் மல்லூர் அருகே நிலவாரப்பட்டியில் உறவினர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
மாலை 6 மணி அளவில் வீட்டிற்கு செல்வதற்காக சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தாசநாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி, எதிர்பாராதவிதமாக ராஜசேகரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இருவரும் சாவு
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கலைவாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராஜசேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராஜசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த மல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலைவாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய கணவன்- மனைவி விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.