கடலில் மூழ்கி தம்பதி தற்கொலை: மகன் இறந்த துக்கம் தாளாமல் விபரீத முடிவு

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் பகுதியில் வயதான தம்பதி உயிரிழந்த நிலையில் கடலில் மிதந்து வந்ததை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2022-06-06 06:44 GMT

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் பகுதியில் இன்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் புனித நீராடி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வயதான முதியவர் மற்றும் மூதாட்டி ஆகிய இருவர் கடலில் பிணமாக மிதந்தனர். அவர்கள் இருவரது உடலும் இடுப்பு பகுதி துணியால் சேர்த்து கட்டப்பட்டிருந்தது.

இதனை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். முதியவர் மற்றும் மூதாட்டி கடலில் பிணமாக மிதப்பது பற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். கடலில் மிதந்த முதியவர் மற்றும் மூதாட்டி பிணங்களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பது தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்து கைபற்றப்பட்ட ஆதார் அட்டை மூலம் இருவரும் கோவை மாவட்டம், பொன்னாபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 62), தனலட்சுமி (59) என தெரியவந்தது.

கடந்த 3-ந் தேதி கோவிந்தராஜூம் அவரது மனைவியும் ராமேஸ்வரம் வந்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் கோவிந்தராஜூம் அவரது மனைவியும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதுபற்றி தங்களது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் தான் இருவரும் துணியால் தங்களது உடலை கட்டிக்கொண்டு கடலில் ஆழமான பகுதிக்கு சென்று தற்கொலை செய்து உள்ளனர்.

மேலும் தங்களது உறவினர்களுக்கு அனுப்பிய தகவலில் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட தங்களது மகன் பெயரில் அறக்கட்டளை அமைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். அறக்கட்டளை அமைக்க தங்களது சொத்தை விற்று விடுமாறும் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி கோவை மாவட்ட போலீசாருக்கு ராமேசுவரம் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கோவிந்தராஜ் உறவினர்களுக்கு கணவன்-மனைவி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்