ஆரணியில் நூற்றுக்கணக்கான நெசவாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்

ஆரணியில் ஆயிரக்கணக்கான கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-10 13:52 GMT

ஆரணி

ரக ஒதுக்கீடு சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் ஆரணியில் ஆயிரக்கணக்கான கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

சேலை உற்பத்தியாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரிலும், ஆரணி சுற்று வட்டார பகுதிகளிலும் நெசவு தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள சைதாப்பேட்டை, சேவூர், தேவிகாபுரம், கீழ்ப்பட்டு, ஒண்ணுபுரம், துருகம், மாமண்டூர், எஸ்.வி.நகரம், புதுப்பேட்டை, வாழைப்பந்தல், கொருக்காத்தூர், காமக்கூர், முள்ளிப்பட்டு, மெய்யூர், நடுக்குப்பம், மருசூர், வடுகசாத்து, அரையாளம், களம்பூர், வடமாதிமங்கலம், மாம்பட்டு, நெடுங்குணம், முணுக்கப்பட்டு, திருமணி, ஆகாரம், வேலப்பாடி, இலுப்பகுணம், கஸ்தம்பாடி, முக்குறும்பை, பாலம்பாக்கம், கரிகாத்தூர், கேளூர், வில்வாரணி, படவேடு, அக்ராபாளையம், தசராபேட்டை, காட்டேரி, புதுப்பட்டு, இரும்பேடு உள்பட 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நெசவு தொழிலை நம்பியே உள்ளனர்.

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் 1985-ம் ஆண்டு பட்டு, கைத்தறி ரக ஒதுக்கீடு சட்ட விதியை அமல்படுத்தியது. அதன்படி கைத்தறி பட்டு ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதற்கு தடைவிதி்க்கப்பட்டது.

விதிமீறல்

ஆனால் கைத்தறி ரக ஒதுக்கீடு சட்ட விதியை மீறி கைத்தறி நெசவாளர்கள் நெசவு செய்யக்கூடிய நவீன டிசைன்களை விசைத்தறியில் (பவர்லூம்) உற்பத்தி செய்வதால் பட்டு கைத்தறி சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைகிறது.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதால் அதனை கண்டிக்கும் வகையில் பட்டுநெசவு கூடம், கைத்தறி நெசவு கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதையடுத்து பட்டு சேலை நெசவாளர் ஒருங்கிணைப்பாளர் கே.பி.பரமாத்மன் தலைமையில் கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோவில் மைதானத்தில் திரண்டனர்.

அங்கு அவர்கள் கைத்தறி மற்றும் பட்டு துணிகளை ரக ஒதுக்கீடு சட்டத்தை மீறி விசைத்தறியில் உற்பத்தி செய்யும் முதலாளிகளை கண்டித்தும், அவ்வாறு ரக ஒதுக்கீடு சட்டத்தை மீறி விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடுத்து நிறுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊர்வலம்

பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று சுந்தரம் தெரு, நேஷனல் டாக்கீஸ் ரோடு, தச்சூர் ரோடு, காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு வழியாக கோட்டை மைதானம், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தனர்.

அங்கு அவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர்.

நடவடிக்கை எடுக்க உறுதி

அப்போது வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி, திருவண்ணாமலையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தார். நெசவாளர்கள் ஊர்வலமாக வந்திருப்பது குறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு ஆரணிக்கு வந்தார். நெசவாளரிடம் கோரிக்கை மனுவை பெற்ற கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி உங்களின் கோரிக்கையை அரசுக்கு உடனடியாக தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணாவில் கைத்தறி சம்மேள பொதுச் செயலாளர் இ.முத்துக்குமார், ஆரணி பட்டு கைத்தறி ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் டி.எச்.குருராஜராவ், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் இரா. பாரி, மாவட்ட துணைத் தலைவர் எம்.வீரபத்திரன், சி.அப்பாசாமி உள்பட நெசவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்