ஆள்நுழை குழிக்குள் மனிதர்கள் இறங்கி பணி செய்யக்கூடாது

ஆள்நுழை குழிக்குள் மனிதர்கள் இறங்கி பணி செய்யக்கூடாது

Update: 2022-06-16 19:45 GMT

பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய அமைக்கப்பட்டுள்ள ஆள்நுழை குழிக்குள் மனிதர்கள் இறங்கி பணி செய்யக்கூடாது என்று தஞ்சை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழிப்புணர்வு கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில், செப்டிக் டேங்க் லாரி உரிமையாளர்கள் மற்றும் பாதாள சாக்கடை வடிகால் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் ஜெகதீசன், மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பேசியதாவது:-

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்ய பயன்படுத்தப்படும் ஆள்நுழை குழிக்குள் மனிதர்கள் இறங்கி பணி செய்யக்கூடாது. பாதாள சாக்கடையில் பணிகளை மேற்கொள்ளும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு பணியாற்ற வேண்டும். இந்த பணியில் ஈடுபடுபவர்கள் தனி நபர் காப்பீடு செய்திருக்க வேண்டும்.

உரிமம் பெற வேண்டும்

தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செப்டிக்டேங்க் கழிவுகளை அகற்றும் செப்டிக் டேங்க் லாரி உரிமையாளர்கள் அந்த கழிவுநீரை மாநகராட்சி சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள அதற்காக அமைக்கப்பட்டுள்ள நச்சு தொட்டிகளில் விட்டு அகற்ற வேண்டும். இதற்கு மாநகராட்சியிடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இதனை கண்காணிப்பதற்காக மாநகராட்சி சார்பில் அங்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநகராட்சி உதவி பொறியாளர்கள் ரமேஷ், அறச்செல்வி, சுபாஷ் சந்திரபோஸ், பாதாள சாக்கடை வடிகால் ஒப்பந்த பணி மேற்பார்வையாளர் மனோகரன், செப்டிக் டேங்க் லாரி உரிமையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சதாசிவம், கென்னடி மற்றும் வடிகால் பணி மேற்பார்வையாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்