'திராவிட மாடல் ஆட்சியின் மைய கொள்கையே மனிதநேயமும், சமூகநீதியும்தான்' முதல்-அமைச்சர் பேச்சு
‘திராவிட மாடல் ஆட்சியின் மைய கொள்கையே மனிதநேயமும், சமூகநீதியும் தான்’ என்று கனடா மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
3-வது பன்னாட்டு மனிதநேய சமூகநீதி மாநாடு கனடாவில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டை இணைய வழியாக தொடங்கிவைத்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார். சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் மரபுத்திங்கள் மசோதா
கடந்த 17-ந்தேதி பெரியார் பிறந்த நாளை மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய வளைகுடா நாடுகள் என உலகின் பல நாடுகள் கொண்டாடி இருக்கிறது. இதுபோன்ற மாநாடுகள் தொடர்ச்சியாக நடந்தால் உலகம் முழுவதும் பெரியார் கொண்டாடப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் மரபுத்திங்கள் மசோதா கனடா நாடாளுமன்றத்தில் 2017-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. தமிழுக்கும், தமிழருக்கும் இத்தகைய பெருமையை சேர்த்த கனடா பிரதமரையும், இதற்கு காரணமான கனடா எம்.பி.க்களையும், கனடா தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
மனிதநேயத்தின் அடிப்படை
இந்த மாநாடு மனிதநேய சமூகநீதி மாநாடாக கூட்டப்பட்டு உள்ளது. மனிதநேயத்தின் அடிப்படையே சமூகநீதிதான். சமூகநீதி கருத்தியலே மனிதநேயத்தின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டு உள்ளது.
பெரியாரின் புத்தகங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் சார்பில் உலகின் 21 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. உலகளாவிய சமூகநீதியை பேசியவர்கள்தான் திருவள்ளுவரும், பெரியாரும்.
உலகமயமாகும் பெரியார்
திருவள்ளுவரின் குறளையும், பெரியாரின் சிந்தனைகளையும் உலகளாவிய அளவில் கொண்டு செல்வதன் மூலமாக மனிதநேய உலகத்தை, சமூகநீதி உலகத்தை, சமநீதி உலகத்தை, சமத்துவ உலகத்தை நாம் உருவாக்க முடியும்.
பெரியார் இன்று உலகமயமாகி வருகிறார் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். பெருமை அடைகிறேன். உலகத்தை உணர்ந்தவராக, எதிர்கால உலகம் எப்படி அமையும் என்பதை கணிக்கக்கூடிய தொலைநோக்கு சிந்தனையாளராக பெரியார் இருந்தார்.
திராவிட மாடல் ஆட்சி
உலக நாடுகளின் பண்பாட்டை இந்தியாவில் விதைக்க விரும்பிய உலகத்தலைவர்தான் பெரியார். மனிதநேயத்தையும், சமூகநீதியையும்தான் அவர் வலியுறுத்தினார். தன்னை போல வலியுறுத்திய உலகத்தலைவர்கள் அனைவரையும் தமிழ்நாட்டுக்கும் அறிமுகம் செய்தார்.
அத்தகைய பெரியாரின் பெருந்தொண்டர்களான அண்ணா, கருணாநிதி ஆகியோரின் வழித்தடத்தில்தான் நான் எனது தலைமையிலான ஆட்சியை நடத்தி வருகிறேன். இதற்கு திராவிட மாடல் என்று பெயர்சூட்டி இருக்கிறேன். எனது திராவிட மாடல் ஆட்சியின் மையக்கொள்கை என்பது மனிதநேயமும், சமூகநீதியும்தான். எண்ணற்ற திராவிட மாடல் திட்டங்களை தீட்டி தமிழ்நாட்டை வளப்படுத்தி வருகிறோம்.
சமூக வளர்ச்சி
கடந்த 50 ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டு உரிமைகள், இருமொழி கொள்கை, தமிழ்மொழி மேம்பாடு, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள், வேளாண்மைக்கு தரப்பட்ட முக்கியத்துவம், சமூக மேம்பாட்டு திட்டங்கள் உருவாக்கம், மாநில உரிமைகளுக்காக போராடுதல் ஆகியவற்றின் மூலமாக தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. அதனை மேலும் உச்சத்துக்கு கொண்டுவரவே திராவிட மாடல் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் தி.மு.க., எங்களின் வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.
திராவிடவியல் கொள்கை
பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் காணவிரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி என திரும்ப திரும்ப வலியுறுத்தி வருகிறேன்.
இத்தகைய திராவிடவியல் கொள்கையானது இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பரவ வேண்டும் என்றும் சொல்லி வருகிறேன். இந்தியாவின் பிற மாநிலங்களை ஆளும் அரசுகள், தமிழகத்தின் திராவிட மாடல் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அறிவதில் ஆர்வமாக இருக்கின்றன. தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவதிலும் துடிப்புடன் இருக்கின்றன.
மானுட சமுத்திரம்
"மானுட சமுத்திரம் நான் எனக் கூவு" என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். மனிதநேயமும், சமூகநீதியும் மட்டுமே மானுட சமுத்திரத்தை ஒன்றாக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் கனடா மனிதநேய அமைப்பின் தலைவர் மார்ட்டின் ப்ரீத், பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் சோம இளங்கோவன், கனடா எம்.பி. கேரி ஆனந்தசங்கரி, பேராசிரியர் கண்ணபிரான் ரவிசங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.