மனித நேய மக்கள் கட்சியினர் சாலை மறியல்

ஆம்பூரில் மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதற்கு எதிராக பா.ஜ.க.வினரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-17 18:05 GMT

சாலை மறியல்

மத்திய பா.ஜ.க. ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனைகள், திட்டங்களை, துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு, ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியில் பா.ஜ.க. தேசிய செயலாளர் இப்ராஹிம், பொது மக்களிடத்தில் வழங்கிக் கொண்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட இரு கட்சியினரிடமும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

நிர்வாகிகள் கைது

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய செயலாளர் இப்ராஹிம், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வாசுதேவன் உள்ளிட்ட பா.ஜ.க. வினரை போலீசார் கைது செய்து ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் அவர்களை போலீசார் விடுவித்தனர்.

மேலும் இப்ராஹிம் தங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இச்சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்