எரியோடு அருகே கல்குவாரி குட்டையில் மனித எலும்புக்கூடு

எரியோடு அருகே கல்குவாரி குட்டையில் மனித எலும்புக்கூடு கிடந்தது.

Update: 2023-04-18 21:00 GMT

எரியோடு அருகே வடுகம்பாடியில் உள்ள ஒரு கல்குவாரியில் குட்டைபோல் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்த குட்டையில் மீன்பிடிப்பதற்காக இளைஞர்கள் சிலர் நேற்று சென்றனர். அப்போது அந்த குட்டையில் மனித எலும்புக்கூடு சேலையுடன் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர்கள், இதுகுறித்து எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது குட்டையில் மிதந்த எலும்புக்கூட்டை போலீசார் கைப்பற்றி, பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த எலும்புக்கூட்டில் சேலை கட்டியிருந்ததால், அது பெண்ணின் சடலம் என்பது தெரியவந்தது. மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், குட்டையில் பிணமாக மிதந்தவர் வடுகம்பாடி வடக்குத்தெருவை சேர்ந்த முருகன் என்பவரது தாய் மாரியம்மாள் (வயது 75) என்பது தெரியவந்தது. கடந்த டிசம்பர் மாதம் மாரியம்மாள் மாயமானதாக முருகன் ஏற்கனவே எரியோடு போலீசில் புகார் அளித்திருந்தார். இருப்பினும் மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தபிறகே எலும்புக்கூடாக கிடந்தவர் மாரியம்மாள் தான் என்பதை உறுதி செய்ய முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்