கண்மாயில் மனித எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு
கண்மாயில் மனித எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
பரமக்குடி,
கண்மாயில் மனித எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எலும்புக்கூடுகள்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா சத்திரக்குடி அருகே உள்ள போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கவிதைகுடி கிராமம். இங்குள்ள கண்மாய்க்கு செல்லும் வழியில் காட்டு கருவேலமரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்நிலையில் அந்த கண்மாயில் மனித எலும்புக்கூடு, தொடை எலும்பு, மண்டை ஓடு ஆகியவை கிடந்தன. இதை பார்த்து அந்த வழியாக சென்ற கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இது தொடர்பாக உடனடியாக சத்திரக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு கிடந்த எலும்புக்கூடுகளை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
கொலையா?
இச்சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் கிராம மக்கள் ஏராளமானோர் அந்த கண்மாயில் கிடந்த எலும்புக்கூடுகளை பார்வையிட்டனர்..
இது குறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த எலும்புக்கூடுகளின் அருகில் ஊதா நிற சட்டையும், உடைந்த நிலையில் செல்போனும் கிடந்தது. அதையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். எலும்புக்கூடாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டாரா ? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.