வடகிழக்கு பருவமழையை நீலகிரி எவ்வாறு எதிர்கொள்ள போகிறது?-பொதுமக்கள் கருத்து
ஊட்டி
வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை நீலகிரி மாவட்டம் இந்த ஆண்டு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது குறித்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்களை பார்க்கலாம்.
வடகிழக்கு பருவமழை
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் பெய்யும். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 200 மில்லி மீட்டர், வடகிழக்கு பருவமழை 300 மில்லி மீட்டர், கோடை மழை 230 மில்லி மீட்டர் பெய்யும்.
ஆனால் நீலகிரியில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 124 சதவீதம் கூடுதலாக பெய்தது.
இதன் காரணமாக 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 3 பேர் காயமடைந்தனர். 2 மாடுகள் இறந்தது. 128 மரங்கள் சாய்ந்து விழுந்தன. 258 வீடுகள் பகுதி அளவு சேதம் அடைந்துள்ளன.
இந்த நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 15-ந் தேதி தொடங்க உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கருத்துக்களை பார்க்கலாம்.
அன்றாட பணிகளில் தொய்வு
சசிகலா, எல்.ஐ.சி. முகவர்:-
நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை தற்போது காலநிலை மாற்றம் காரணமாக வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்கிறது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை போல் அல்லாமல் வருடத்தில் 9 மாதங்கள் மழையுடன் போராட வேண்டியுள்ளது. நான் எனது பணி காரணமாக பொதுமக்களை சந்திக்கவும், அலுவலகத்திற்கு போகவும் வெளியில் செல்கிறேன். இந்த நிலையில் மழை பெய்து மண்சரிவு ஏற்பட்டு சாலையில் மரங்கள் விழுந்து விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் சந்திக்க முடியாமல் அன்றாட பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. வேலை விஷயம் காரணமாக கோவையில் இருந்து நீலகிரிக்கு தினசரி மற்றும் வாரத்தில் இருமுறை வந்து செல்பவர்கள் அதிகம் உள்ளனர். வடகிழக்கு பருவமழையின்போது கடந்த ஆண்டு பரலியார், குன்னூர் பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே இந்தாண்டு மழை பாதிப்பு அதிகமானால் நீலகிரியில் இருந்து கோவைக்கு அடிக்கடி வந்து செல்பவர்களின் வேலைகள் தாமதமாகும். எனவே மழை பாதிப்பு அதிகம் உள்ள இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும்.
குழந்தைகளின் படிப்பு பாதிப்பு
ஷம்சீர் அலி, ஆட்டோ டிரைவர்:-
நீலகிரியில் தொடர் மழை பெய்யும் போது ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுவது மற்றும் சாலைகளில் மண் சரிவு ஏற்படுவது தான் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் சில நேரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை மாணவ மாணவிகளும் பெற்றோரும் விரும்புகின்றனர். ஆனால் கொரோனா காரணமாக கல்வி பாதிப்பு மற்றும் தென்மேற்கு பருவமழையின் போது பள்ளிகளுக்கு 10 நாட்களுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளதால், இந்த மழையின் போதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதே சமயத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள் கூட திடீர் மழை நேரத்தில் ஆட்டோ பயணத்தை தேர்வு செய்வார்கள் என்பதால் எங்களுக்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரால் வாகனம் ஓட்டுவது கடும் சவாலாக உள்ளது.
கோத்தகிரி காவிலோரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம்.
பருவமழை பெய்யும் நேரங்களில் காவிலோரை முதல் குருக்குத்தி, வ.ஊ.சி நகர் வழியாக செல்லும் நீரோடை தூர் வாரப்படாததால் மழைவெள்ளம் பெருக்கெடுத்து தாழ்வான பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விலை நிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் சேதமடைந்து வருவது வழக்கமாகி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே பருவமழை துவங்கும் முன் நீரோடைகள் அனைத்தையும் நன்கு தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொலைதூர பழங்குடியின கிராமங்களில் பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் ஆதிவாசி மக்களின் வீடுகளைப் பராமரிக்கவும், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் குடியிருப்போரை உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு மாற்றவும், அவர்களுக்கு தங்குவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தும் வகையில் புயல் நிவாரண கூடங்கள், சமுதாய கூடங்கள், அரசுப் பள்ளிகளை தயார் நிலையில் முன் கூட்டியே வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைப் பிரதேசங்களில் அடிக்கடி சாலைகளில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுவது நடைபெறுவதால், உடனுக்குடன் அவற்றை அகற்ற தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த் துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். கிராம பேரிடர் குழுக்கள், பேரிடர் மீட்பு முன்களப் பணியாளர்களுடன் இணைத்து பணியாற்ற வேண்டும்.
சு.மனோகரன், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர்:-.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தை யுனெஸ்கோ நிறுவனம் இந்தியாவில் முதல் உயிர் சூழல் மண்டலமாக அறிவித்தது. எனவே நீலகிரி மாவட்டம் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக உள்ளது. தற்போது இங்கு கட்டிட காடுகள் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பருவ மழை காலங்களில் பெரும் பாதிப்புகளை சந்திக்க வேண்டியது உள்ளது.மழை வெள்ளம் வடிய முடியாததால் பொதுமக்களின் வீடுகள் இடிதல், உயிர் சேதம், சாலைகளில் மண் சரிவு, மரம் விழுதல் போன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றன. சாலைகளில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் பொதுமக்கள் இன்னல்களை சந்திக்கும் நிலை உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்கள் பேரிடர் இலக்காக உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஆனால் தற்போது அந்த இடங்களிலும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆழ்குழாய் கிணறு அமைக்கவும் பொக்லின் எந்திரம் பயன்படுத்தவும் மாவட்டத்தில் தடை உள்ளது. இருப்பினும் இந்த இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நிலச்சரிவு அபாயம் ஏற்படும் நிலை இருந்து வருகிறது.
குன்னூர் ஊட்டி போன்ற இடங்களில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட் ட நிலத் தடி வடிகால்கள், நீர் நிலைகள் போன்றவை ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது. இதனால் பெருமழை காலத்தில் நகரப் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. கிராம புறங்களில் விளை நிலங்கள் வாங்கப்பட்டு அபாயகரமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவைகளை தமிழக அரசு கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆழ்குழாய் கிண்று, பொக்லின் எந்திரம் பயன்பாடு போன்றவற்றிற்கு கடுமையான தடை விதிக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வர வேண்டும். தவறும் பட்சத்தில் சுற்றுசூழல் நிபுணர்கள் கூறியது போன்று எதிர்காலத்தில் நீலகிரி மாவட்டம் அழிவை சந்திக்கும் நிலை ஏற்படும்.
கோத்தகிரி, அரவேனு காமராஜர் நகரைச் சேர்ந்த மனோகரன்:- நீலகிரி மாவட்டத்தில் பருவமழை பெய்யும் போது ஏற்படும் பேரிடர்களால் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. மாவட்டத்தில் மொத்தம் 283 இடங்கள் பேரிடர் அபாயமுள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் பேரிடர்கள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு, பேரிடர் மீட்பு குறித்த செயல் விளக்க நிகழ்ச்சிகளும் மாவட்ட நிர்வாகத்தால் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. பருவ மழை நேரத்தில் வீடுகள் இடிந்து சேதமடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. வீடுகள் முழுமையாக இடிந்து சேதமடைந்தால் வருவாய்த்துறை சார்பில் ரூபாய் 5,100 ம், வீட்டின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தால் 4,100 ரூபாயும் உடனடி நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது. வீடுகள் இழந்து பாதிக்கபட்டவர்களுக்கு அரசு வழங்கும் இந்த நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை. எனவே இந்த நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழங்குடியின கிராமங்கள் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கு அரசு பல ஆண்டுகளுக்கு முன் கட்டிக் கொடுத்து, உரிய பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை பருவ மழை துவங்கும் முன் பராமரித்து கொடுக்க நடவடிக்கை எடுத்தால், பலத்த மழையால் வீடுகள் சேதமடைவதைத் தடுக்க முடியும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை தென்மேற்கு பருவமழை 70 சதவீதம் பெய்யும், வடகிழக்கு பருவ மழை 30 சதவீதம் தான் பெய்யும். அதே சமயத்தில் தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட ஊட்டி, கூடலூர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பெய்யாது. நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையின் தீவிரம் அதிகமாக இருக்கலாம். இந்தாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் வடகிழக்கு பருவமழையால் கடற்கரை மாவட்டங்களுக்குதான் பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால் நீலகிரியில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருந்தாலும் பாதிப்புகளை எதிர் கொள்ள வருவாய் துறை, தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆறு, கால்வாய்களை தூர்வாருவது எப்போது?
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதனால் அரசு தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பேரிடர் மீட்பு உள்ளிட்ட மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர் அம்ரித், வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். மேலும் மழைநீர் தேங்கும் பகுதிகளை கணக்கிடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதியில் உள்ள ஆறுகள், கால்வாய்கள் தூர்வார வேண்டும். குறிப்பாக மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் பருவமழையின் போது மழைநீர் தேங்கி ஊருக்குள் புகுந்துவிட வாய்ப்பு உள்ளது. மேலும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மழைநீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆறுகள் மற்றும் கால்வாய்களை தூர்வாரினால் மழையால் ஏற்படும பாதிப்புகளை ஓரளவுக்கு தடுக்க வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.