தென்னை மரங்களை தாக்கும் சிவப்பு கூன்வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி?

தென்னை மரங்களை தாக்கும் சிவப்பு கூன்வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2023-09-01 18:49 GMT

சிவப்பு கூன்வண்டுகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களை தாக்கும் சிவப்பு கூன்வண்டுகளை ஒருங்கிணைந்த முறைகளை கடைபிடித்து கட்டுப்படுத்தலாம். சிவப்பு கூன்வண்டின் புழுக்கள் மரத்தின் தண்டு பகுதிகளை உள்ளிருந்து துளைத்து மென்று தின்று சக்கைகளாக வெளியேற்றுவதால் குருத்து பகுதி பாதிக்கப்பட்டு மரம் ஒடிந்து விழுந்து சேதம் விளைவிக்கும். இதனால் பொருளாதார சேதம் ஏற்படுகிறது. மரத்தின் காயங்களில் கூன்வண்டுகள் முட்டையிடுவதால் மரங்களில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காண்டாமிருக வண்டுகள் தாக்கிய இடத்திலும் கூன்வண்டுகள் முட்டையிடுவதால் காண்டாமிருக வண்டுகள் தாக்குதலை முறையாக கட்டுப்படுத்த வேண்டும். பச்சை மட்டைகளை வெட்டுவதை தவிர்க்கவும். அவசியம் ஏற்பட்டால் தண்டுப்பகுதியிலிருந்து 3 அடி தள்ளி வெட்டவும். இடிதாக்கிய மரங்கள் மற்றும் கூன்வண்டு தாக்கிய மரங்கள் ஆகியவை கூன்வண்டுகளின் வாழ்விடம் என்பதால் அம்மரங்களை வெட்டி தீயிட்டு எரிக்கவும்.

கவர்ச்சிப்பொறி

கரும்புச்சாறு 2½ லிட்டர், ஈஸ்ட் மாத்திரை 5 கிராம், 5 மி.லி. அசிட்டிக் அமிலம், நீளவாக்கில் வெட்டப்பட்ட தென்னை இலை மட்டை, துண்டு போடப்பட்ட பானைகளை ஏக்கருக்கு 30 வீதம் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்க வேண்டும். கவர்ச்சிப்பொறியில் கவரப்படும் வண்டுகளை அவ்வப்போது கண்காணித்து அழிக்க வேண்டும். அதிகப்படியாக சேதமான இடங்களில் மரம் முற்றிலும் பாதிப்படைந்தால் மட்டும், வேரின் மூலம் மருந்து செலுத்தி கட்டுப்படுத்தலாம். மருந்து செலுத்தப்பட்ட மரங்களில் இருந்து 45 நாட்களுக்கு பிறகே காய்களை அறுவடை செய்ய வேண்டும். கூன்வண்டு தாக்குதலுக்கு உள்ளான மரங்களை தோப்புகளிலேயே விட்டு வைப்பது காண்டாமிருக வண்டுகளின் இனப்பெருக்கத்திற்கும் வழிவகுப்பதால் பாதிக்கப்பட்ட மரங்களை தோப்பில் இருந்து நீக்குவதே இவ்விரு வண்டுகளின் தாக்குதலை குறைக்கும் முக்கிய வழிமுறையாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்