மேச்சேரி அருகே சினிமாவை மிஞ்சும் சம்பவம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டியது எப்படி?-கைதான ஆசிரியை நிவேதா பகீர் தகவல்கள்

மேச்சேரி அருகே சினிமாவை மிஞ்சும் வகையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டியது எப்படி? என்பது குறித்து கைதான ஆசிரியை நிவேதா போலீசில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.;

Update: 2023-07-27 21:01 GMT

மேச்சேரி:

என்ஜினீயர் சாவு

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே மலையம்பாளையத்தை சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் மகன் சுந்தரராஜ் (வயது 32). பி.இ. மெக்கானிக்கல் படித்து விட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், சேலம் குகை பகுதியை சேர்ந்த நிவேதா (27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிவேதா பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ளார். இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான். அவன், அங்குள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்தநிலையில் சுந்தரராஜ் அவரது வீட்டில் தூக்குப்போட்டு இறந்ததாக ஜலகண்டாபுரம் போலீசார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சுந்தரராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுந்தரராஜ் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

கள்ளக்காதல்

கழுத்தில் காயங்கள் இருந்ததாலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பட்ட தகவல் இருந்ததாலும் சுந்தரராஜ் சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுந்தரராஜ் மனைவி நிவேதாவை கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

ஒரு கட்டத்தில் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் நிவேதா, அவருடைய கள்ளக்காதலன் தினேஷ் என்பவருடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இந்த கொலைக்கு மூளையாக நிவேதாவின் தோழி வித்யா இருந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

உடனே போலீசார் சுந்தரராஜ் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றினர். இந்த கொலை தொடர்பாக நிவேதா, அவருடைய கள்ளக்காதலன் தினேஷ், தோழி வித்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

பகீர் தகவல்கள்

கைதான 3 பேரிடமும் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாயின. அதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

சுந்தரராஜூக்கும், நிவேதாவுக்கும் திருமணம் முடிந்த பிறகே இருவரும் குடும்பத்துடன் ஐதராபாத்தில் குடியேறினர். அங்குதான் அவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக இருந்துள்ளனர். இந்தநிலையில் சுந்தரராஜூக்கு வயிற்று வலி இருந்துள்ளது. உடனே அவர்கள் சொந்த ஊரான ஜலகண்டாபுரம் மலையம்பாளையத்துக்கு கடந்த 5 மாதத்துக்கு முன்புதான் வந்தனர். அங்கு சுந்தரராஜ், பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக இருந்தார்.

தனிமையில் சந்திப்பு

அந்த பகுதியில் சுந்தரராஜ் தறி தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தார். மேலும் வயிற்றுவலிக்கு ஈரோட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். வருமானம் குறைந்ததால் நிவேதா, நானும் வேலைக்கு செல்கிறேன் என்று கூறி விட்டு அங்குள்ள தனியார் பள்ளியில் தற்காலிகமாக ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.

அப்போதுதான் தோழி வித்யா மூலம் தினேசுடன், நிவேதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

மனைவியை கண்டித்த சுந்தரராஜ்

தினேஷ், நிவேதா கள்ளக்காதல் சுந்தரராஜூக்கு தெரியவந்தவுடன் மனைவியை கண்டித்துள்ளார். அதன்பிறகு பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என மனைவிக்கு தடை போட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த நிவேதா வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

அதன்பிறகு வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் தினேஷ், நிவேதாவை ரகசியமாக சந்தித்து வந்துள்ளார். இந்த பிரச்சினை குறித்து நிவேதா, வித்யாவிடம்் கூறி இருக்கிறார். வித்யா, உன்னுடைய கணவரை கொன்று விடு. அப்போதுதான் நிம்மதியாக வாழலாம் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.

சினிமாவை மிஞ்சும் கொலை

அதற்கான நேரத்தை எதிர்பார்த்து நிவேதாவும், தினேசும் காத்திருந்தனர். சுந்தரராஜ் தந்தையும், தாயும் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர். அந்த நேரத்தில் சுந்தரராஜை தீர்த்துக்கட்ட நிவேதா முடிவு செய்தார். மகனை வீட்டின் ஒரு பகுதியில் தூங்க வைத்து விட்டு இன்னொரு பகுதியில் கணவரின் கொலை திட்டத்தை நிவேதா அரங்கேற்றி உள்ளார்.

அதன்படி உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து சுந்தரராஜை தூங்க வைத்துள்ளார். இதையடுத்து தினேசை வரவழைத்து சுந்தரராஜ் முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி உள்ளனர். பின்னர் தலையணையால் அமுக்கி சினிமாவை மிஞ்சும் வகையில் கொலை செய்துள்ளதாக தெரிகிறது.

கொலையை மறைக்க அவரது கழுத்தில் சேலையின் ஒரு முனையை கட்டி உள்ளனர். அதன் அருகிலேயே சேலையை கத்தரிக்கோலால் துண்டித்துள்ளனர். பின்னர் சேலையின் மீதி பாகத்தை மின்விசிறியில் கட்டி தொங்க விட்டுள்ளனர். அதன்பிறகு தினேஷ் வீட்டுக்கு சென்று விட்டார்.

நாடகமாடினார்

அதிகாலை நேரத்தில் நிவேதா, சுந்தரராஜின் பெற்றோருக்கு போன் செய்து, கணவருக்கு அதிக வயிற்றுவலி இருந்ததாகவும், அதற்காக மாத்திரை கொடுத்து தூங்க வைத்ததாகவும் கூறியுள்ளார். அதிகாலையில் எழுந்து பார்த்த போது சுந்தரராஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவர்களிடம் நாடகமாடியதும் விசாரணையில் வெளியாகி உள்ளது.

பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்களிடம் கணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஒரு மாலை வாங்கி வரும்படி உறவினர் ஒருவரிடமும் நிவேதா கூறியுள்ளார். உறவினர்கள் மாலை வாங்கி வந்துள்ளனர். அதனை போட்டு சுந்தரராஜ் கழுத்தில் இருந்த காயத்தை நிவேதா மறைத்துள்ளார். தற்போது போலீசில் கள்ளக்காதலனுடன் நிவேதா சிக்கிக்கொண்டார்.

இந்த தகவல் அனைத்தும் நிவேதா உள்பட 3 பேரிடமும் நடத்திய விசாரணையில் வெளியானதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கொலைக்கு மூளையாக செயல்பட்ட பள்ளி தோழி

நிவேதாவின் பள்ளி தோழியான வித்யா சேலம் குகை பகுதியை சேர்ந்தவர். அவருக்கும், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த செந்தில்குமாருக்கும் திருமணம் நடந்தது. பள்ளி தோழிகள் இருவரும் ஒரே பகுதிக்கு திருமணமாகி வந்ததால் அடிக்கடி சந்தித்தும் வந்துள்ளனர். வித்யா பட்டுப்புடவைகள் தயாரிக்கும் ஒரு நெசவு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு தினேசும் வேலை பார்த்து வந்துள்ளார். வித்யா மூலமாகத்தான் தினேஷ், நிவேதாவுக்கு அறிமுகம் ஆகி உள்ளார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் சுந்தரராஜூக்கு தெரிய வந்தவுடன், அவரை தீர்த்துக்கட்ட மூளையாக செயல்பட்டு திட்டம் போட்டு கொடுத்ததும் வித்யாதான் என்று போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

சுந்தரராஜை எப்படி கொலை செய்ய வேண்டும். அதனை மறைக்க என்ன செய்ய வேண்டும். உறவினர்கள், போலீசாரிடம் எப்படி நாடகமாட வேண்டும் என்ற விவரங்களை எல்லாம் நிவேதாவுக்கு, வித்யாதான் சொல்லி கொடுத்ததாகவும், அதன்பேரிலேயே தினேசும், நிவேதாவும் மின்னல் வேகத்தில் இந்த கொலையை அரங்கேற்றி உள்ளது போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கொலையை அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை

சுந்தரராஜ் கழுத்து, கால் பகுதியில் காயங்கள் இருந்துள்ளன. மேலும் தூக்கில் தொங்கினால் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுக்குழல் சேதம் அடைந்து இருக்குமாம். ஆனால் சுந்தரராஜ் மூச்சு திணறடிக்கப்பட்டு தான் இறந்துள்ளார். அதாவது, சுந்தரராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் அனைத்தும் போலீஸ் பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே நிவேதாவும், அவருடைய கள்ளக்காதலன் தினேஷ், தோழி வித்யா ஆகிய 3 பேரும் போலீசில் சிக்கி உள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கைதான் சுந்தரராஜ் சாவை கொலை என அம்பலப்படுத்தி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்