ஓ.பன்னீர்செல்வம் வீட்டை சூறையாட எவ்வளவு நேரம் ஆகும்? தேனி ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்
ஓ.பன்னீர்செல்வம் வீட்டை சூறையாட எவ்வளவு நேரம் ஆகும்? என்று தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தேனி பங்களாமேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தனித்தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததால் தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் இருந்தும் அ.தி.மு.க.வினர் பலர் ஆர்ப்பாட்டத்துக்காக தேனியில் குவிந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தி.மு.க. அரசை கண்டித்தும், மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
துரோக யுத்தம்
தேனி மாவட்டம் விசுவாசமிக்க மாவட்டம். இந்த மாவட்டத்திலும் சில நேரத்தில் துரோகிகள் வந்து விடுகிறார்கள். அவரை (ஓ.பன்னீர்செல்வம்) நம்பி தானே ஜெயலலிதா இத்தனை பொறுப்புகளை கொடுத்தார். அவர் ஏற்கனவே நடத்தியது தர்மயுத்தம். இப்போது நடத்துவது துரோக யுத்தம். அவர் தர்மயுத்தம் நடத்தியபோது அவரை நம்பி சென்றவர்கள் இப்போது எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்துவிட்டார்கள்.
உங்களை முதல்-அமைச்சராக உட்கார வைத்து அழகு பார்த்த, பொருளாளராக உட்கார வைத்து அழகு பார்த்த, ஒருங்கிணைப்பாளராக உட்கார வைத்து அழகு பார்த்த, அ.தி.மு.க. தொண்டர்களின் கோவிலாக இருக்கும் தலைமைக் கழகத்தை குண்டர்களை, ரவுடிகளை அழைத்து வந்து சூறையாடி இருக்கிறீர்களே! உங்கள் வீட்டை சூறையாட எவ்வளவு நேரம் ஆகும் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. செய்யலாமா?
எம்.பி. ராஜினாமா
எப்போது எல்லாம் ஓ.பன்னீர்செல்வம் போராடுகிறார் என்பதை நாங்களும் கவனித்துக் கொண்டு தான் இருந்தோம். தொண்டர்களும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். தொண்டர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் ஓடி ஒளிந்து கொள்வார். அவருக்கு பதவி பறிபோகிறது என்றால் தர்மயுத்தம் நடத்துவார்.
அ.தி.மு.க.வை பொய் வழக்கு போட்டு அழிக்க நினைக்கிற தி.மு.க.வை ஓ.பன்னீர்செல்வம் இப்படி கும்பிடுவதற்கு என்ன அர்த்தம் என்று தான் தெரியவில்லை. நமக்கு ஒரே ஒரு எம்.பி. கிடைத்தார் என்று சந்தோசமாக இருந்தோம். இங்குள்ள உண்மை தொண்டர்களின் உழைப்பால் தான் அவர் வெற்றி பெற்றார். ஒரே ஒரு எம்.பி.யை நீக்கி விட்டது சர்வாதிகார உச்சம் என்கிறார். நான் கேட்கிறேன், ப.ரவீந்திரநாத் எம்.பி. உண்மையில் மக்கள் செல்வாக்கு படைத்தவராக இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள்.
இரட்டை இலை செல்வாக்கு
தேனியில் நீங்கள் வெற்றி பெற்று விட்டால் நான் பொது வாழ்க்கையில் இருந்து விலகி விடுகிறேன். உண்மை தொண்டர்களின் உழைப்பால் தான், இரட்டை இலை செல்வாக்கால் தான் ப.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
தி.மு.க.வினர் ஆட்சிக்கு வரும் முன்பு சொன்னது ஒன்றாகவும், இப்போது அவர்கள் செய்வது ஒன்றாகவும் உள்ளது. சொத்துவரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு என மக்களின் நலனில் அக்கறையின்றி செயல்படுகிறது. அந்த ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜக்கையன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.