தரம் எப்படி? எடை எப்படி?ரேஷன் கடைகளில் கூடுதலாக என்னென்ன பொருட்கள் தேவை?பொதுமக்கள் கருத்து

ரேஷன் கடைகளில் கூடுதலாக என்னென்ன பொருட்கள் தேவை என்பது குறித்து தேனி மாவட்ட பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

Update: 2023-04-28 18:45 GMT

ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் கிடைப்பதால், சாதாரண மக்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினரும் அங்கு உணவு பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.

கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் வருகை குறைவாக காணப்படுகிறது. காலையில் 8.30 மணியில் இருந்து பகல் 12.30 மணி வரையிலும், மாலையில் 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரையிலும் கடை திறந்திருக்க வேண்டும். இருந்தாலும் பொதுமக்கள் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காலையில் 9 மணிக்கு உள்ளாகவும், மாலை 4 மணிக்கு மேலும்தான் ரேஷன் கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் பகல் நேரங்களில் பெரும்பாலான ரேஷன் கடைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன. மாலையில் பரபரப்பாக மாறி விடுகின்றன.

தேனி மாவட்டத்தில் சில இடங்களில் ரேஷன் கடைகள் பிற்பகல் 4 மணிக்குள் அடைக்கப்படுகின்றன. அதுபோன்ற பகுதிகளில் மாலையில் பொருட்கள் வாங்கலாம் என்று செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அதுபோல், ரேஷன் கடைகளில் வழக்கமாக வழங்கிவரும் பொருட்களுடன் கூடுதலாகவும் சில உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

தற்போது வழங்கப்படும் பொருட்கள் தரமாகவும், எடை சரியாகவும் இருக்கிறதா? கூடுதலாக என்ன பொருட்கள் தேவைப்படுகிறது? போன்றவை குறித்து இங்கே பலர் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதன் விவரங்களைக் காண்போம்.

கோதுமை மாவு, உளுந்து

கம்பத்தை சேர்ந்த மகாலட்சுமி கூறும்போது, 'ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்களை தரமாக வழங்க வேண்டும். சில நேரங்களில் அரிசி தரம் குறைவாக வருகிறது. அதுபோன்ற அரிசி மூட்டைகளை ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். பருப்பு, கோதுமை போன்றவை குறிப்பிட்ட அளவில் மட்டுமே வழங்கப்படுகிறது. இவற்றை கூடுதலாக வழங்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடைகளில் கோதுமை மாவு, உருட்டு உளுந்து போன்றவையும் வழங்கப்பட்டது. தற்போது இவை இரண்டும் நிறுத்தப்பட்டு உள்ளதால் மீண்டும் அவற்றை வழங்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் அதிகரித்து வருவதால் கோதுமை கூடுதலாக வழங்க வேண்டும். வீடுகளுக்கு தேவைப்படும் மளிகைப் பொருட்கள் தரமானதாகவும், நியாயமான விலையிலும் ரேஷன் கடைகளில் வழங்கினால் பொதுமக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்' என்றார்.

எள், கொள்ளு

குமணன்தொழுவில் ரேஷன் பொருட்கள் வாங்க வந்த மூதாட்டி சீனியம்மாள் கூறும்போது, 'அரிசி, கோதுமை, பச்சரிசி போன்றவை வழங்கப்படுகிறது. வயதானவர்கள் இவற்றை அதிகம் பயன்படுத்துவது இல்லை. கோதுமை வழங்குவது போல், கோதுமை மாவு வழங்கலாம். அவ்வாறு வழங்கினால் முதியோர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். வயதான முதியவர்களுக்கு வீடுகளுக்கு தேடிச் சென்று ரேஷன் பொருட்களை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.

வெள்ளை சர்க்கரை வழங்கும் அதே நேரத்தில், நாட்டு சர்க்கரை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நாட்டு சர்க்கரை பயன்பாடு மக்களிடம் அதிகரித்து உள்ளது. பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, எள், உளுந்து, கொள்ளு போன்றவற்றையும் மானிய விலையில் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.

சிறுதானியங்கள்

பெரியகுளத்தை சேர்ந்த சுந்தரி கூறும்போது, 'ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியான எடையில் வழங்குகிறார்கள். அரிசி, பருப்பு போன்றவை தரமாகவே இருக்கிறது. ஆனால் இதர பொருட்கள் வாங்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். குறிப்பாக, கடுகு, பொரிகடலை, தேயிலை உள்ளிட்ட பொருட்களை கட்டாயம் வாங்கினால் தான் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

சில பொருட்கள் சந்தை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏழை, எளிய மக்கள் அவற்றை எப்படி வாங்க முடியும். முன்பு கடையில் வழங்கியது போல், உளுந்து வழங்க வேண்டும். அதுபோல், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களும் வழங்க வேண்டும்' என்றார்.

மளிகை பொருட்கள்

கெப்புரெங்கன்பட்டியை சேர்ந்த கிராம வனக்குழு தலைவர் முருகன் கூறும்போது, 'ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, சர்க்கரை எல்லாம் எடை குறைவாக தான் வழங்கப்படுகிறது. சில நேரங்களில் அரிசி தரம் குறைவாக இருக்கிறது. எனவே, பருப்பு, சர்க்கரையை பாக்கெட்டாக வழங்கலாம். பெரும்பாலான இடங்களில் மாலை 5 மணிக்கு முன்பாக கடைகள் அடைக்கப்படுகின்றன. அவற்றை முழுமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மளிகை பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான பால் பொருட்கள், சோப்பு, எண்ணெய் போன்றவற்றை மானிய விலையில் ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும். அது ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பாமாயில் வழங்குவது போல், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவை வழங்கலாம்' என்றார்.

தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள்

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறும்போது, 'ரேஷன் கடைகளுக்கு சில நேரங்களில் தரமில்லாத அரிசி வருவது வழக்கம்தான். நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி தரமாக இருப்பதை, தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் தான் முடிவு செய்கிறார்கள். அரிசி தரமில்லை என்றால் அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும். மாறாக ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது.

ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அரிசி மூட்டைகளில் குறைந்தது 5 கிலோ எடை குறைவாகத்தான் வருகிறது. இதேபோல்தான் மற்ற பொருட்களிலும் எடை குறைவு உள்ளது. எனவே அனைத்து நுகர் பொருள் வாணிப கிடங்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்' என்றனர்.

கண்காணிப்பு குழு

உணவுத் துறை அதிகாரிகள் கூறும் போது, 'தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35 ஆயிரத்து 296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக், குழுவின் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலரும், உறுப்பினர்களாக நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ஆகிய 4 அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குதல் மற்றும் குடோன்களில் இருந்து பெறுதல், சரியான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுதல், சரியான நேரத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்தல் உள்ளிட்டவைகளை இக்குழு கண்காணிக்கிறது. இதேபோல், திடீர் ஆய்வு பணிகளையும் இந்த குழு மேற்கொள்கிறது. அத்துடன் மாதம் தோறும் முதல் மற்றும் 3-வது திங்கட்கிழமைகளில் இந்த குழு கூடி, ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதையும், சரியான நேரத்தில் மக்களுக்கு பொருட்கள் கிடைக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்து விவர அறிக்கையை உணவு வழங்கல் கமிஷனருக்கு அனுப்பி வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் தவறுகள் நடக்க வாய்ப்புகள் இல்லை. தவறு நடந்தால் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள் கடைகளிலேயே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது' என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்