அரசு பள்ளி வளாகங்கள் பராமரிப்பு எப்படி?

அரசு பள்ளி வளாகங்கள் பராமரிப்பு எப்படி? என்பது குறித்து பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-05-09 20:19 GMT

ஏழை, நடுத்தர குடும்பத்தினர்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் 317-ம், அரியலூர் மாவட்டத்தில் 539-ம் உள்ளன. மேலும் உயர்நிலைப்பள்ளிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 143-ம், அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 98-ம், மேல்நிலைப்பள்ளிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 79-ம், அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 88-ம் உள்ளன.

இதில் அரசு பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்நிலையில் அரசு பள்ளிகளில் கல்வியின் தரம், வகுப்பறை, பள்ளி வளாகம், கழிப்பறை, விளையாட்டு மைதானம் போன்றவை எப்படி இருக்கின்றன என்பது பற்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கூடுதல் கட்டிடம் வேண்டும்

அரியலூரை சேர்ந்த கார்த்தி:- எனது மகள் லோகஸ்ரீ அரியலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கில் 2-ம் வகுப்பு முடித்து, 3-ம் வகுப்பு செல்கிறாள். இப்பள்ளியில் ஆசிரியர்கள் நன்கு கற்பிக்கின்றனர். எங்களை போன்ற ஏழை, நடுத்தர மக்களின் குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற வகையில் இப்பள்ளி உள்ளது. மேலும் இப்பள்ளியில் ஆரம்ப கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நூலகம் ஒன்றை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பள்ளியில் குடிநீர் வசதி இல்லை. எனவே குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் ஏராளமானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதையடுத்து, தனியார் பள்ளியில் இருந்து, அரசு பள்ளியை நாடி பலர் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். இப்பள்ளியிலும் ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். எனவே மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டிடம் மற்றும் கழிவறை கட்டிடம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

வசதிகள் இல்லாதது தடை

விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவரின் தந்தை அழகர்:- இன்றைய சூழலில் அரசு பள்ளிகளில் கல்வியின் தரம், தனியார் பள்ளிகளை விட குறைவாகத்தான் உள்ளது. மேலும் அரசு பள்ளிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி, விளையாட்டு மைதானம், ஆய்வக வசதி போன்ற வசதிகள் குறைவாகத்தான் உள்ளன. இது போன்ற வசதிகள் இல்லாதது அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சரியான அளவில், திறமையாக கற்பதற்கு தடையாக உள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஒழுக்க கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். அதை கடைபிடிக்காத மாணவர்களை கண்டிக்கின்ற முழு உரிமையும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் தனியார் பள்ளிகளை போல் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களையும் மிகத் திறமையானவர்களாக உருவாக்க முடியும். எனவே மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், அரசு பள்ளிகளில் செய்து கொடுப்பதோடு, ஒழுக்கத்திற்கான கட்டுப்பாடுகளை அதிகமாக்கும்போது அரசு பள்ளிகள் சிறந்து விளங்கும்.

ஸ்மார்ட் வகுப்பறை

வயலப்பாடியை சேர்ந்த வனிதா:- எங்களது கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எனது குழந்தைகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கழிவறை, வகுப்பறை வசதிகள் எதுவும் இன்றி இருந்தது. மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்றால் சரியான ஆசிரியர்கள் தேவை. அது தற்போது பூர்த்தி அடைந்துள்ளது. மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர். மாணவர்களுக்கு தேவையான கல்வி, விளையாட்டு, அறிவியல் திறனுக்கான உபகரணங்கள் என படிப்படியாக கொண்டு வந்துள்ளனர். தற்போது புதிதாக கணினி வசதி, ஸ்மார்ட் வகுப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிக்கு இணையாக இப்பள்ளியை கொண்டு வர முயற்சிக்கின்றனர். இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை, விளையாட்டு மைதானம் தேவை. உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

சிறப்பான அடிப்படை வசதிகள்

பூலாம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவியும், பட்டதாரியுமான ரேணுகாதேவி:- இந்த பள்ளியில் நாங்கள் படித்த காலத்தைவிட தற்போது அடிப்படை வசதிகள் பள்ளி நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. தினமும் தூய்மை பணியாளர்களை கொண்டு சுகாதார வளாகம் மாலையில் தூய்மை செய்யப்படுவதாக பள்ளி மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். குடிநீர் மற்றும் தண்ணீர் போதுமான அளவில் கிடைக்கிறது. முற்றிலும் கிராமப்புற ஏழை, எளிய விவசாய மக்களின் பிள்ளைகளும், நடுத்தர மக்களின் பிள்ளைகளும் கல்வி பயிலும், இந்த பள்ளியில் மாணவ-மாணவிகள் படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக கபடி விளையாட்டிலும், கலைத்திறன் போட்டிகளிலும் மாநில அளவில் சிறப்பிடம் பெற்று வருகின்றனர். இப்பள்ளியில் விளையாட்டு ஆசிரியர் பகுதி நேரமாக பணிபுரிகிறார். நிரந்தரமாக உடற்கல்வி இயக்குனர் அல்லது உடற்கல்வி ஆசிரியரை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நியமனம் செய்ய வேண்டும்.

முறையாக பராமரிக்க வேண்டும்

தா.பழூரை சேர்ந்த புவனேஸ்வரன்:- பொதுவாகவே அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் இருந்தாலும், அது போதுமான அளவில் இருப்பதில்லை. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரமான கழிப்பிட வசதி மிகவும் அவசியம். எனவே பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவர்களுக்கு போதுமான கட்டமைப்பு வசதிகளை பள்ளி வளாகத்திற்குள் ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை. அதுமட்டுமின்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கழிவறைகளை சுத்தமாக முறையாக பராமரிப்பது குறித்து தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலும் பராமரிப்பு சரியாக இல்லாவிட்டால் பயனளிக்காது.

Tags:    

மேலும் செய்திகள்