பொன்னியின் செல்வன்படம் எப்படி? ரசிகர்கள் கருத்து

நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்போடு பொன்னியின் செல்வன் படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தை பார்த்த கடலூர் மாவட்ட ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

Update: 2022-10-01 18:45 GMT

பொன்னியின் செல்வனை பிரமாண்டமான திரைப்படம் என்பேன். ஒரு படத்திற்கு மிகப்பெரும் பலம் கதாபாத்திரங்கள் தேர்வு. அது இந்த படத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளது. பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்திருக்கிறேன். அதனால் தியேட்டருக்குள் ஒருவித எதிர்பார்ப்போடு சென்ற எனக்கு எந்த காட்சியிலும் தொய்வு ஏற்படவில்லை. கண்களுக்கு விருந்தாக காட்சிகள், காதுகளுக்கு விருந்தாக இசை, பொன்னியின் செல்வன் நாவலை திரையில் கண்டது எல்லையில்லா மகிழ்ச்சி.

அப்பு

பொன்னியின் செல்வன் படம் பார்க்கும் போது, நம்மை சோழ தேசத்துக்கு அழைத்துச் செல்வது போல் உணர வேண்டும் என ஆசைப்பட்டேன். அதை மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படம், நூறு சதவீதம் நிறைவு செய்திருக்கிறது. படத்தில் ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, நம்பியாண்டாவாக வரும் ஜெயராம் ஆகியோர் கதையின் கதாபாத்திரத்துடன் ஒன்றி இருக்கிறார்கள். மற்றபடி உலகின் நிகரற்ற, அதாவது 60 ஆயிரம் யானைகள், 5 லட்சம் குதிரைப்படைகள், 10 ஆயிரம் கப்பற்படைகள் என காவிரி பூம்பட்டினத்தில் நிறுத்தப்பட்டதாக செப்பேடுகள் சொல்லும், எந்த தடயமும் படத்தின் சண்டை காட்சிகளில் இல்லை.

ஷோபனா

படம் சூப்பர். ரொம்ப நல்லா பண்ணியிருக்கார் மணிரத்னம். விஷுவல் பக்காவாக இருக்கு. கார்த்தி மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். அதற்கு அடுத்து என்னை கவர்ந்தது ஜெயராம் நடிப்பு. நல்ல படம் பார்க்கலாம். அரண்மனை அரங்குகள் பிரமிக்க வைத்தன. சரித்திர காலத்து ஆடையில் நடிகர்-நடிகைகள் அழகாக தெரிந்தார்கள். பழைய காலத்துக்கு அழைத்து சென்ற உணர்வை ஏற்படுத்தியது. வந்தியத்தேவனாக வரும் கார்த்தியும் நந்தினியாக வரும் ஐஸ்வர்யாராயும் ஸ்கோர் செய்து இருந்தார்கள். நிறைய கதாபாத்திரங்கள் இருந்ததால் சீக்கிரம் படம் முடிந்து விட்டது போன்ற உணர்வை தந்தது. சோழர்கள் வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் அதிகமாக காட்டி இருக்கலாம்.

பவித்ரா

நான் தியேட்டரில் மொபைல் போன் உபயோகப்படுத்தாமல் பார்த்த படம் இது மட்டுமே. காட்சிகள் சிலிர்க்க வைத்தது. ''பொன்னி நதி'' பாடல், சம்புவரையர் அரண்மனை பிரமாண்டம். ரவிவர்மனின் கேமரா சோழ சாம்ராஜ்ஜியத்தை பிரதிபலித்திருக்கிறது. குந்தவையும் நந்தினியும் சந்திக்கும் காட்சியில் தியேட்டரில் விசில் பறந்தது, பெண்கள் அதிகம் கொண்டாடியது அந்த காட்சியை தான். பொன்னியின் செல்வன் பாகம் 2-ஐ காண ஆவலாக உள்ளேன்.

சரண்

நான் இதுவரை பொன்னியின் செல்வன் நாவலை படிக்கவில்லை. எதிர்பார்ப்பு இல்லாமல்தான் தியேட்டருக்குள் நுழைந்தேன். ஆனால் படத்தில் இடம்பெற்ற அரண்மனை காட்சிகள், இயற்கை எழில் கொஞ்சும் காடுகள், ராஜ உடைகள் எல்லாவற்றையும் பார்க்கும்போது ஆயிரம் வருடங்கள் பின்னோக்கி சென்ற பிரமிப்பு. நடிகர்களின் தமிழ் உச்சரிப்பு பிரமாதம். விக்ரம் நடிப்பிலும், பேச்சிலும் அசர வைத்துள்ளார். சில காட்சிகள் மெதுவாக நகர்ந்தன. தமிழில் இது போல் மீண்டும் ஒரு படம் வருமா? என்பது சந்தேகமே.

Tags:    

மேலும் செய்திகள்