கழுகின் பதற்றத்தை சமாளித்தது எப்படி?

நாட்டில் முதல் முறையாக விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட போது கழுகின் பதற்றத்தை சமாளித்தது எப்படி? என்பது குறித்து குமரி வனத்துறை அதிகாரி இளையராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-05 20:51 GMT

நாகர்கோவில்:

நாட்டில் முதல் முறையாக விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட போது கழுகின் பதற்றத்தை சமாளித்தது எப்படி? என்பது குறித்து குமரி வனத்துறை அதிகாரி இளையராஜா தெரிவித்துள்ளார்.

அரிய வகை கழுகு

குமரி மாவட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டு ஒகி புயல் தாக்கியது. அப்போது வீசிய சூறைக்காற்றில் ஒரு அரிய வகை கழுகு குஞ்சு காற்றில் இழுத்து வரப்பட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியில் விழுந்து கிடந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று கழுகை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளித்தனர். அப்போது அந்த கழுகு சினேரியஸ் வகையைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. அதன்பிறகு அந்த கழுகானது உதயகிரி கோட்டை பல்லுயிர் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளாக அந்த கழுகு பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அந்த அரிய வகை கழுகானது உதயகிரி கோட்டையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மச்சியா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. குமரி மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமையிலான குழுவினர் அந்த கழுகை மிகவும் பாதுகாப்பான முறையில் ஜோத்பூருக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா கூறியதாவது:-

விமானத்தில் எடுத்து...

சினேரியஸ் வகை கழுகுகள் ரஷியா, சீனா மற்றும் சைபீரியா பகுதிகளை வாழ்விடமாகக் கொண்டது. குளிர் காலங்களில் இடம் பெயர்ந்து இந்தியாவுக்கு வருவது வழக்கம். காற்றின் வேகம் காரணமாக இந்த கழுகு குமரி மாவட்டத்துக்கு வந்திருக்கலாம். இந்த கழுகை கடந்த 5 ஆண்டுகளாக பாதுகாப்பான முறையில் பராமரித்து வந்தோம்.

இந்த நிலையில் கழுகை அதன் வாழ்விடத்தில் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் மச்சியா உயிரியல் பூங்காவில் கழுகுகளை பராமரிக்க தேவையான வசதிகள் இருப்பதால் கழுகானது அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஜோத்பூர், கன்னியாகுமரியில் இருந்து சுமார் 2,600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சாலை அல்லது ரெயிலில் செல்வதற்கு குறைந்தது 3 நாட்கள் ஆகும் என்பதால் இந்த கழுகை விமான மூலம் கொண்டு செல்ல சிறப்பு அனுமதியும் வனத்துறையால் பெறப்பட்டது. கடந்த 30-ந் தேதி சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 3 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் கடந்த 3-ந் தேதி ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னையில் இருந்து ஜோத்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக ஒரு அரிய வகை கழுகு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பதற்றத்தை சமாளித்தது எப்படி?

ஒரு உயிரினத்தை விமானத்தில் கொண்டு செல்லும் போது அதற்கு ஏற்படும் பதற்றம் காரணமாக அந்த உயிரினம் இறந்து போக அதிகளவில் வாய்ப்பு உள்ளது. இல்லை எனில் அந்த உயிரினத்தால் விமானத்தில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். இதனால் தான் உயிரினங்கள் விமானத்தில் கொண்டு செல்லப்படுவது இல்லை. எனவே கழுகை விமானத்தில் கொண்டு செல்வதற்கு முன்பாக அதன் பதற்றத்தை குறைக்க சிறப்பு பயிற்சி வனத்துறையால் கொடுக்கப்பட்டது.

அதாவது கழுகு வாழ்ந்த இடத்தில் உள்ள மண், செடி, கொடிகளுடன் பிரத்யேக கூண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் தினமும் சில மணி நேரங்கள் அந்த கூண்டில் கழுகு அடைத்து வைக்கப்படும். அதன்பிறகு தினமும் ஒரு வாகனத்தில் பயணிக்க வைத்து பயணத்தின் போது ஏற்படும் அதிர்ச்சிக்கு பழக்கப்படுத்தப்பட்டது. விமானிகளுக்கு சிறப்பு அறிவுரை வழங்கப்பட்டு வெப்பநிலை மற்றும் காற்றழுத்தம் சீராக வைக்கப்பட்டது. உதயகிரி கோட்டையில் அந்த கழுகை பராமரித்து வந்த பணியாளரும், ஜோத்பூர் வரை அழைத்து செல்லப்பட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்