தாரமங்கலம் அருகே லாரி டிரைவரை கொன்றது எப்படி?-போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

தாரமங்கலம் அருகே லாரி டிரைவரை கொன்றது எப்படி? என்பது குறித்து போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-01-09 20:48 GMT

தாரமங்கலம்:

கிணற்றுக்குள் உடல்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கருக்குப்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நேற்றுமுன்தினம் ஆண் பிணம் மிதந்தது. அதாவது கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் பாதி உடல் மட்டும் கிடந்தது.

இது பற்றி தகவல் அறிந்ததும் தாரமங்கலம் போலீசார் விரைந்து வந்து, துண்டிக்கப்பட்ட உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக மிதந்தவர் தாரமங்கலம் அருகே பெரியசோரகை மாட்டுக்காரனூரை சேர்ந்த லாரி டிரைவர் மணி (வயது 50) என்பது தெரியவந்தது. மணியின் கைகள் மற்றும் உடலை தனித்தனியாக துண்டித்து மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை கிணற்றுக்குள் வீசி உள்ளனர்.

பிரேத பரிசோதனை

பாதி உடல் கைப்பற்றிய நிலையில் மீதி உடலையும் தேடும் பணி தொடர்ந்து நடந்தது. இதற்காக கிணற்றில் இருந்த தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. அப்போது அங்கு துண்டு, துண்டாக வெட்டப்பட்ட மணியின் உடற்பாகங்கள் அனைத்தையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். தொடர்ந்து போலீசார் அதனை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தாரமங்கலத்தில் உள்ள ஒரு சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளர் குமார் என்பவரின் லாரியில் டிரைவராக மணி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை பாரம் ஏற்றுவதற்காக லாரி உரிமையாளர் கூப்பிடுவதாக மனைவி சரஸ்வதியிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. மாலையில் கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார்.

3 தனிப்படைகள்

இந்த கொடூர கொலை தொடர்பாக தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தொல்காப்பியன், ஆனந்தராஜ், ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் கொலையாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

குமார் என்பவரின் லாரியில் மணி டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் லாரியில் அடிக்கடி மர பாரம் ஏற்றி சென்றுள்ளார். அவருடன் கருக்குப்பட்டியை சேர்ந்த செல்லான் என்கிற செல்வராஜ் மற்றும் துட்டம் பட்டியை சேர்ந்த சக்திவேல் ஆகியோரும் வேலை பார்த்து வந்துள்ளனர். செல்வராஜ், சக்திவேல் இருவரும் மரம் அறுக்கும் தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது. எனவே சந்தேகத்தின் பேரில் அவர்கள் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

மரம் அறுக்கும் எந்திரம்

தொழில் போட்டியால் மணி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட மணியின் உடலை மரம் அறுக்கும் எந்திரம் மூலம் வெட்டி உள்ளனர். அதாவது 2 கைகளை தனியாகவும், 2 கால்கள் தனியாகவும், உடலை 2-ஆகவும் என துண்டு, துண்டாக வெட்டி கிணற்றில் வீசி இருக்கிறார்கள். உடல் பாகங்கள் முழுவதும் கைப்பற்றி உள்ளோம். இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்