காருக்குள் சிறுவன் இறந்து கிடந்தது எப்படி?

Update: 2023-05-28 19:49 GMT

சேலத்தில் காருக்குள் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சிறுவனின் உடல் அடையாளம் தெரிந்தது. சிறுவன் காருக்குள் இறந்து கிடந்தது எப்படி? கொலை செய்யப்பட்டானா? என்பது குறித்து தாயிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் பட்டறை

சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த ராமநாதபுரம் ரஷ்யா காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 28). இவர் அதே பகுதியில் மிலிட்டரி ரோட்டில் கார் மெக்கானிக் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது தங்கையின் திருமணத்திற்காக கடந்த 22-ந் தேதி பட்டறைக்கு பூட்டு போட்டு விட்டு சென்றுள்ளார்.

திருமணம் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மாணிக்கம் மீண்டும் கார் பட்டறைக்கு வந்தார். அப்போது பட்டறைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து அந்த காரின் கதவை திறந்து பார்த்தபோது, காருக்குள் சுமார் 7 வயது சிறுவனின் உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சிறுவனின் பிணம் மீட்பு

இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காருக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சிறுவன் யார்? எந்த பகுதியை சேர்ந்தவன்? அவனது பெற்றோர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

அதில், சம்பந்தப்பட்ட கார் 4 மாதங்களுக்கு முன்பு இந்த பட்டறைக்கு டிங்கரிங் வேலைக்காக கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் காருக்குள் சிறுவன் இறந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பட்டறையில் பூட்டி நிறுத்தப்பட்டு இருந்த காரில் சிறுவன் எப்படி வந்தான்? என்றும், அல்லது சிறுவனை யாராவது கொலை செய்து உடலை காருக்குள் வைத்து விட்டு சென்றிருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மீட்கப்பட்ட சிறுவனின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அதே இடத்தில் டாக்டர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.

அடையாளம் தெரிந்தது

இதனிடையே, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

பிணமாக கிடந்த சிறுவன், அதே பகுதியை சேர்ந்த சுகன்யா (27) என்பவரின் மகன் சிலம்பரசன் (7) என அடையாளம் தெரிந்தது. சுகன்யாவுக்கும், கண்ணன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சிலம்பரசன் என்ற மகனும், 2 மகள்களும் இருந்தனர்.குடும்ப தகராறு காரணமாக சுகன்யா முதல் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வசித்து வந்த கட்டிட தொழிலாளி வினோத் (31) என்பவருடன் சுகன்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் அவர்கள் 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு கணவன்-மனைவியாக இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.

தாயாரிடம் விசாரணை

இந்த நிலையில் சிலம்பரசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவன் கோலாத்து கோம்பையில் உள்ள அவனது தந்தை வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று நாங்கள் தேடவில்லை என சிறுவனின் தாய் சுகன்யா கூறினார். அவர் கூறுவது உண்மையா? என்பது குறித்து அவரிடமும், வினோத்திடமும் விசாரித்து வருகிறோம்.

மேலும், நண்பர்களுடன் சிலம்பரசன் விளையாடியபோது, காருக்குள் ஏறிவிட்டு அதன்பிறகு வெளியே வரமுடியாமல் மூச்சு திணறி இறந்தானா? என்ற கோணத்திலும் கார் பட்டறை உரிமையாளரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் சிறுவன் எப்படி இறந்தான்? என்ற முழு விவரம் தெரியவரும்.

இவ்வாறு போலீசார்கூறினர்.

மேலும் செய்திகள்