வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது

கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 400-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

Update: 2022-08-31 17:54 GMT
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி மேட்டூர் அணைக்கு உபரி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு மேலணையை அடைந்து அங்கிருந்து கல்லணையை வந்தடைகிறது. கல்லணையில் இருந்து கொள்ளிடம், காவிரி ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 நாட்களாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. கொள்ளிடம் ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருப்பதால் கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமங்களான நாதல் படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல் திட்டு, மேலவாடி, கோரை திட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 400-க்கு மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

வீட்டை விட்டு வெளியேறினர்

இதனால், அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு கரையோரம் உள்ள முகாம்களுக்கு செல்கின்றனர். மேலும் அந்த கிராமங்களில் கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை படகு மூலம் அழைத்து வந்து கரையோரம் உள்ள மரங்களில் கட்டி வைத்து பாதுகாத்து வருகின்றனர். கரையோரம் தங்கியுள்ள மக்களுக்கு ஆச்சாள்புரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உணவு தயாரிக்கப்பட்டு வாகனம் மூலம் கொண்டு சென்று வழங்கப்பட்டு வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்