காட்டு யானை தாக்கி வீடுகள் சேதம்

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி 3 வீடுகள் சேதமடைந்தது. அப்போது இடிபாடுகளில் சிக்கி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-08-26 14:40 GMT

கூடலூர்,

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி 3 வீடுகள் சேதமடைந்தது. அப்போது இடிபாடுகளில் சிக்கி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

வீடுகளை உடைத்தது

கூடலூர் அருகே பாடந்தொரை பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வீடுகள் மற்றும் பொதுமக்களின் உடைமைகளை சேதப்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் ஒருமடம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரின் வீட்டை காட்டு யானை உடைத்தது. அப்போது லேசான காயத்துடன் மூதாட்டி உயிர் தப்பினார்.

இந்த நிலையில் செளுக்காடி பகுதியில் காட்டு யானை ஒன்று வீடுகளை முற்றுகையிட்டது. தொடர்ந்து பாக்கு, வாழை மற்றும் பயிர்களை தின்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் ஆதிவாசி மக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. தொடர்ந்து 3 வீடுகளை உடைத்தது. அப்போது வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த வினோத் (வயது 21), சிவன் (16) ஆகிய 2 பேர் மீது கட்டிட இடிபாடுகள் சரிந்து விழுந்தது.

2 பேர் படுகாயம்

இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் ஆதிவாசி மக்கள் கூச்சலிட்டனர். மேலும் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வனச்சரகர் ராஜேந்திரன், வனவர் செல்லதுரை, வனக்காப்பாளர் சிவகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் படுகாயம் அடைந்த வினோத், சிவன் ஆகியோரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே காட்டு யானை நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானை ஊருக்குள் வராத நாட்களே இல்லை. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்