அழிக்கால் கிராமத்தில் மண்ணுக்குள் புதைந்த வீடுகள்

குமரியில் ஆக்ரோஷமாக சீறிய அலையால் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. அழிக்கால் கிராமத்தில் மணலை சுருட்டிக் கொண்டு சென்றதால் மண்ணுக்குள் சில வீடுகள் புதைந்தன. இதனால் மீனவர்கள் பாதுகாப்பு கருதி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

Update: 2022-07-02 21:04 GMT

நாகர்கோவில்:

குமரியில் ஆக்ரோஷமாக சீறிய அலையால் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. அழிக்கால் கிராமத்தில் மணலை சுருட்டிக் கொண்டு சென்றதால் மண்ணுக்குள் சில வீடுகள் புதைந்தன. இதனால் மீனவர்கள் பாதுகாப்பு கருதி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

கடல்நீர் புகுந்தது

குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். அப்போது சில சமயத்தில் ஆக்ரோஷமாக எழும் அலையால் கடல்நீர் ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தும் சம்பவமும் நடந்துள்ளது. இதில் ஒவ்வொரு வருடமும் அழிக்கால் கடற்கரை கிராமம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே மாதிரியான நிலை ஏற்படுவதால் அந்த 3 மாதங்களில் மீனவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்தநிலையில் ஜூலை மாதமான தற்போது கடல் சீற்றம் வழக்கத்தை விட ஆக்ரோஷமாக காணப்பட்டது. அழிக்கால் கிராமத்தில் நேற்று காலையில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. ஆக்ரோஷமாக சீறிய அலை தண்ணீருடன் மணலையும் சுருட்டியபடி வீடுகளுக்குள் புகுந்தது.

வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன

இதனால் அந்த வீடுகளில் வசிக்கும் மீனவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தன. அந்த தண்ணீரால் வீட்டில் இருந்த தட்டு, முட்டு சாமான்கள், சோபாக்கள் உள்ளிட்டவை மிதந்தன.

மேலும் தண்ணீருடன் மணலையும் அள்ளி சென்றதால் வீடுகளை சுற்றி மணல் குவியல், குவியலாக கிடந்தன. இதில் ஒரு சில வீடுகள் பாதி அளவு மண்ணுக்குள் புதைந்தன. இதனை தொடர்ந்து மீண்டும் கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்து விடாமல் இருப்பதற்காக வீட்டு முன்பு மணல் மூடைகளை அடுக்கி வைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

கடல்நீர் அழிக்கால் கிராமத்தில் புகுந்ததில் கீழத்தெரு, மேலத்தெரு, நடுத்தெருவில் உள்ள 75 வீடுகள் பாதிப்பை சந்தித்தது. இதனால் அங்கு வசித்த அனைவரும் பாதுகாப்பு கருதி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் சிலர் அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மின்சாதன பொருட்கள் சேதம்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் வேதனையுடன் கூறுகையில், "ஒவ்வொரு வருடமும் இந்த மாதத்தில் கடல் சீற்றம் ஆக்ரோஷமாக உள்ளது. சில சமயத்தில் ஊருக்குள் தண்ணீர் புகுந்து வீடுகளில் வசிக்க முடியாத நிலைக்கு எங்களை தள்ளி விடுகிறது. கடல் சீற்றம் காலங்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக நாங்கள் வேறு இடங்களுக்கு சென்று வசிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கடல் சீற்றத்தை தடுக்க எங்கள் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும். தூண்டில் வளைவு பணி நடந்து வந்தாலும் இது இன்னமும் முடியவில்லை. தற்போதைய சீற்றத்தால் வீட்டில் இருந்த டி.வி., வாஷிங்மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன" என்றனர்.

மிடாலத்திலும் பாதிப்பு

இதேபோல் குமரி மாவட்ட மேற்கு கடற்கரை பகுதியான மேல்மிடாலம் மீனவ கிராமத்திலும் நேற்று திடீரென கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் கடற்கரையோரம் உள்ள சில வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் சில வீடுகளில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தன. மிடாலத்தில் கடல் அரிப்பை தடுப்பதற்காக போடப்பட்ட கற்கள் சேதமடைந்தன.

இதனால் அவர்கள் பாதுகாப்பு கருதி வீட்டை காலி செய்து உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். குமரி மாவட்டத்தில் அழிக்கால், மேல் மிடாலம் உள்ளிட்ட சில கிராமங்களில் கடல்நீர் ஊருக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜய் வசந்த் எம்.பி. பார்வையிட்டார்

மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் விஜய் வசந்த் எம்.பி. அழிக்கால் கிராமத்திற்கு சென்று கடல்நீர் புகுந்த இடத்தை பார்வையிட்டார்.தொடர்ந்து அவர் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உணவு, பாய், தலையணைகள் கொடுக்க ஏற்பாடு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அகஸ்தீஸ்வரம் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தாசில்தார் சேகர் உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அங்கு ஊருக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சேத விவரத்தையும் கணக்கிட்டனர்.

கணபதிபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகளை சூழ்ந்த தண்ணீரை மீண்டும் கடலுக்குள் திருப்பி விடும் பணி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்