வீடுகள், விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது

பந்தலூரில் தொடர் மழையால் வீடுகள், விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. ஊட்டியில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-08-07 13:36 GMT

பந்தலூர், 

பந்தலூரில் தொடர் மழையால் வீடுகள், விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. ஊட்டியில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெள்ளம் சூழ்ந்தது

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பந்தலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பொன்னானி, சோலாடி, விலக்கலாடி, வெள்ளேரி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளேரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாட்டவயல் அருகே உள்ள பொது விளையாட்டு மைதானத்தை வெள்ளம் சூழ்ந்தது. அம்பலமூலா அருகே வட்டகொல்லி, மணல்வயல், வெள்ளேரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

இதனால் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கள் தண்ணீரில் நனைந்தன. பின்னர் மக்கள் வீடுகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதேபோல் சில இடங்களில் விளைநிலங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வாழை மற்றும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருகின்றன. சேரம்பாடியில் பூபதிராஜா என்பவரது வீட்டின் பின்புறம் மண்சரிவு ஏற்பட்டது. பந்தலூர்-கூடலூர் சாலை உள்பட பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

பொதுமக்கள் அவதி

பந்தலூரில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தகவல் பரிமாற்றம் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. ஊட்டியில் நேற்று பரவலாக மழை பெய்தது.

பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஊட்டி-கோத்தகிரி சாலை கோடப்பமந்து பகுதியில் மரம் முறிந்து கடை மீது விழுந்தது. இதில் கடையின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் எந்திரம் மூலம் மரத்தை அப்புறப்படுத்தினர்.

மரம் விழுந்தது

7-வது மைல் பகுதியில் இருந்து சோலூர் செல்லும் சாலையில் மரம் விழுந்தது. இதனை ஊட்டி தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர். ஊட்டியில் தொடர் மழை பெய்தாலும், சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து வருகிறது. பலத்த காற்று வீசுவதால், வாகனங்களை மரத்துக்கு அடியில் நிறுத்த வேண்டாம் என்று போலீசார் அறிவுரை வழங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்