சிட்லிங் ஊராட்சி காரப்பாடி மலை கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு 48 வீடுகள் கலெக்டர் திவ்யதர்சினி நேரில் ஆய்வு

சிட்லிங் ஊராட்சி காரப்பாடி மலை கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 48 வீடுகளை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-06-12 16:53 GMT

தர்மபுரி:

சிட்லிங் ஊராட்சி காரப்பாடி மலை கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 48 வீடுகளை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மலைவாழ் மக்கள்

அரூர் ஒன்றியம் சிட்லிங் ஊராட்சிக்குட்பட்ட மலை கிராமமான காரப்பாடியில் மலைவாழ் மக்களுக்கு ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் புதிதாக 48 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் மலைவாழ் மக்களிடம் கலந்துரையாடி அறிவுரை வழங்கி பேசினார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

மலைவாழ் மக்கள், பழங்குடியினர் மேம்பாட்டிற்காக அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மலைவாழ் மக்களுக்கு கல்வி, சுகாதாரம், குடிநீர், இருப்பிட வசதி, பொருளாதார மேம்பாடு என அனைத்தையும் ஏற்படுத்தி கொடுக்க அரசு ஆணையிட்டுள்ளது. அதனை மாவட்ட நிர்வாகம் முழுமையாக செயல்படுத்தி வருகின்றது. பழங்குடியின மலைவாழ் மக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

ஆரோக்கியம்

காரப்பாடி மலை பகுதியில் வசிக்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் வசிப்பதற்கு வீடு வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது. இயற்கையோடு இணைந்து மலை கிராமங்களில் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களுக்கு அனைத்தும் சுத்தமாக இயற்கையாக கிடைக்கின்றது. ஆனாலும் மலை கிராம மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள முன்வருவதில்லை. எனவே அனைவரும் சுகாதாரத்துடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த ஆய்வின்போது அரூர் உதவி கலெக்டர் விஸ்வநாதன், பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் கதிர் சங்கர், தாசில்தார் கனிமொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், சிட்லிங் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரி, துணைத்தலைவர் வேலாயுதம், வார்டு உறுப்பினர் தீபக் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்