டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வீடுதோறும் மாநகராட்சி பணியாளர்கள் ஆய்வு - பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

மாநகராட்சி அடையாள அட்டையுடன் வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Update: 2022-09-30 10:01 GMT

பருவநிலை மாற்றம் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் 10 லட்சத்து 97 ஆயிரத்து 632 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 9 ஆயிரத்து 117 வீடுகளில் கொசுக்கள் உருவாகும் இடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மழை அடிக்கடி பெய்து வருவதால், வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் கிடக்கும் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் போன்றவைகளில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

கிணறு, தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். தண்ணீர் நிரப்பிய பூ 'ஜாடி', குளிர்சாதனப் பெட்டியின் கீழ்த்தட்டு, 'மணிபிளான்ட்' போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரத்துக்கு ஒருமுறை சுத்தப்படுத்த வேண்டும்.

வீடுகளில் களஆய்வு மேற்கொள்ள, மண்டல சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட மாநகராட்சி அடையாள அட்டையுடன் வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்