திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நெசவாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காவிட்டால் தற்கொலை செய்வோம் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் மனுக்களை பெற்றார். திருப்பூர் நெசவாளர் காலனியை சேர்ந்த மணி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெசவாளர்கள்
நாங்கள் கைத்தறி நெசவு தொழில் செய்து வருகிறோம். சங்கத்தின் சார்பில் நெசவாளர்களிடம் பணம் பெற்று அரசின் பங்களிப்புடன் வீடு கட்ட கடந்த 1998-ம் ஆண்டு மடத்துக்குளத்தில் நிலம் வாங்கப்பட்டது. 218 பேருக்கு 12 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. வீட்டுமனை பட்டா ஒதுக்கப்பட்ட நிலம் அளவீடு செய்யாமல் மாவட்ட நிர்வாகம் விட்டுவிட்டது. பின்னர் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டில் 2019-ம் ஆண்டு என்னுடன் 217 பேருக்கு பட்டா வழங்குவதாக கோர்ட்டில் மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்ததன் பேரில் மனு முடித்து வைக்கப்பட்டது. அதன்படி 8 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 210 பேருக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. எங்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர எங்களுக்கு வேறுவழி தெரியவில்லை.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
தர்ணா
திருப்பூர் மிலிட்டரி காலனியை சேர்ந்த ஜான்வில்லியம், ஜெபமாலைமேரி குடும்பத்தினர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு முன் அமர்ந்து கதறி அழுதபடி திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் அளித்த மனுவில், 'எனது தந்தை ரெய்மெண்ட், தாயார் அன்னமேரி (வயது 82). தந்தை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 1996-ம் ஆண்டு இந்திய ராணுவ படைவீரர் என்ற தகுதியின் அடிப்படையில் மிலிட்டரி காலனியில் 2 ஆயிரத்து 600 சதுர அடி நிலம் அரசு சார்பில் வழங்கப்பட்டது.
அசல் ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. அங்கு குடிசை அமைத்து குடியிருந்து வந்தனர். தந்தை இறந்து விட்டார். தாயார் உள்ளார். இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் எனது தந்தை கடன் வாங்கியதாகவும், அதற்கு நிலத்தை விற்றுவிட்டதாகவும் கூறி எங்களது நிலத்தை அபகரிக்க முயற்சிக்கிறார். வீட்டை காலி செய்யச்சொல்லி மிரட்டுகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன் எனது தாயாரை தாக்கி அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
கோவில் சொத்து அபகரிப்பு
குன்னத்தூர் வெள்ளிரவெளி கிராமத்தை சேர்ந்த காளியப்பன் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்குக்கு முன் அமர்ந்து தர்ணா செய்தனர். அவர்கள் அளித்த மனுவில், 'இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கரியகாளியம்மன் கோவில் சொத்துகளை தனிநபராக இருந்து அபகரிப்பு மற்றும் கோவிலுக்கு சொந்தமான லட்சக்கணக்கான பணத்தை கையாடல் செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அபகரிப்பில் உள்ள கோவிலுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர்.