பரமத்திவேலூர் அருகேவடமாநில தொழிலாளர்கள் வீடுகளுக்கு மீண்டும் தீ வைப்பு3 டிராக்டர்கள் எரிந்து சேதம்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே வடமாநில தொழிலாளர்களின் வீடுகளுக்கு மீண்டும் தீ வைக்கப்பட்டது. இதில் வீடுகள், அங்கு நிறுத்தியிருந்த 3 டிராக்டர்கள் எரிந்து சேதம் அடைந்தன.
ெவல்ல ஆலை
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதியில் கடந்த வாரம் ஆலை கொட்டகைகள், குடிசைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் தொடர்புடைய 6 பேரை ஜேடர்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து அங்கு 250-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் இரவு வரை அங்கு பாதுகாப்பு பணியை கவனித்த போலீசார் மீண்டும் தங்களது இயல்பான பணிக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியை சேர்ந்த வக்கீல் துரைசாமி (வயது 57) என்பவர் சொந்தமாக வெல்லம் தயாரிக்கும் ஆலை வைத்துள்ளார். இந்த ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வந்தனர். அவர்கள் தங்குவதற்காக ஆலை உரிமையாளர் 10 சிறிய வீடுகளை கட்டினார். மேலும் கொட்டகை அமைத்து அதில் 3 டிராக்டர்கள், ரொட்டாவெட்டர் மற்றும் கரும்பு வெட்டும் எந்திரம் ஆகியவற்றையும் நிறுத்தி வைத்திருந்தார். இதற்கிடையே ஹோலி பண்டிகை மற்றும் ஆலையில் வேலை இல்லாததால் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால் ஆலை மூடப்பட்டு வீடுகள் பூட்டப்பட்டு இருந்தன.
வீடுகள் எரிந்தன
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கொட்டகைக்கு பின்புறம் சென்ற மர்ம நபர்கள் வீடுகளின் மேற்கூரை மற்றும் கொட்டகைக்கு தீ வைத்தனர். இதில் அங்கிருந்த 10 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. கொட்டகைக்குள் நிறுத்தியிருந்த 3 டிராக்டர்கள், ரொட்டாவெட்டர், கரும்பு வெட்டும் எந்திரங்களும் தீப்பிடித்து எரிந்தன.
இதுபற்றிய தகவல் அறிந்து அங்கு ஓடி வந்த துரைசாமி டிராக்டரை வெளியே எடுக்க முயன்றார். அப்போது மேற்கூரையில் எரிந்து கொண்டிருந்த தீ துரைசாமி மீது விழுந்ததில் காயமடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (55) என்பவருக்கு சொந்தமான குடிசைக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் குடிசையில் இருந்த 10 மூட்டை அரிசி, ரூ.30 ஆயிரம், ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தன. இதுகுறித்து நாமக்கல் மற்றும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
பரபரப்பு
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், சேலம் மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று பாதுகாப்பு பணிகள் குறித்தும், தீ வைத்த மர்ம நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தினர்.
மேலும் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.