கவுந்தப்பாடி அருகே வீட்டில் தீ விபத்து; முன்னாள் வேளாண்மை அலுவலர் உடல் கருகி பலி

கவுந்தப்பாடி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முன்னாள் வேளாண்மை அலுவலர் உடல் கருகி பலியானார்.

Update: 2023-06-28 21:57 GMT

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முன்னாள் வேளாண்மை அலுவலர் உடல் கருகி பலியானார்.

முன்னாள் வேளாண்மை அலுவலர்

கவுந்தப்பாடி அருகே உள்ள ஓடத்துறை நரிக்கரடு தோட்டத்தை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன் (வயது82). ஓய்வுபெற்ற வேளாண்மைத்துறை அலுவலரான சங்கமேஸ்வரன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். அவரது மனைவி சரஸ்வதி மற்றும் இளைய மகள் மோகனமீனாட்சி அருகே உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சங்கமேஸ்வரன் நேற்று முன்தினம் இரவு ஓட்டு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 12.30 மணி அளவில் வீடு திடீரென தீப்பிடித்தது. மளமளவென பரவிய தீ வீடு முழுவதும் பிடித்து எரிந்தது.

தீ விபத்தில் சிக்கினார்

இதற்கிடையே வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்து சரஸ்வதி மற்றும் அக்கம்பக்கத்தினர் வெளியே வந்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீடு மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வீட்டின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சாவு

பின்னர் சங்கமேஸ்வரனை தேடி பார்த்தபோது அவர் உடல் கருகி கரிக்கட்டையான நிலையில் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சங்கமேஸ்வரனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தீப்பிடித்தபோது வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த சங்கமேஸ்வரன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் தீப்பிடித்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்தில் உடல் கருகி முன்னாள் வேளாண்மை அலுவலர் உடல் கருகி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்