சாக்கடை வடிகால் அமைக்க குழி தோண்டியபோது வீடு சேதம்: தம்பதி போராட்டம்
கரூரில் சாக்கடை வடிகால் அமைக்க குழி தோண்டியபோது வீடு சேதம் அடைந்தது. இதையடுத்து அதனை சரிசெய்து தரக்கோரி தம்பதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தம்பதி போராட்டம்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 16-வது வார்டு ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர். இவரது மனைவி கோமதி. இந்தநிலையில் இப்பகுதியில் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களாக சாக்கடை வடிகால் அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியின்போது பாலசந்தர்-கோமதி தம்பதி வீட்டின் பக்கவாட்டு சுவர் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சேதமடைந்த சுவரை சரிசெய்து தருமாறு ஒப்பந்ததாரரிடம் தம்பதி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த இடத்தில் சாக்கடை வடிகால் அமைப்பதற்காக கான்கிரீட் அமைக்கும் பணி நேற்று நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலசந்தர்-கோமதி தம்பதி நேற்று கான்கிரீட் அமைக்கும் குழிக்குள் இறங்கி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சேதமடைந்த வீட்டின் பக்கவாட்டு சுவரை சரிசெய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தம்பதிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.