அந்தியூர் அருகே வீடு புகுந்து துணிகரம்: கத்திமுனையில் பெண்ணிடம்5 பவுன் தாலிசங்கிலி பறிப்பு- முகமூடி கொள்ளையனுக்கு போலீஸ் வலைவீச்சு
அந்தியூர் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் தாலிசங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அந்தியூர்
அந்தியூர் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் தாலிசங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மளிகை கடை
அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கோவிலூர் பகுதியைச்சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது55). இவருடைய மனைவி தங்கம்மாள் (47). இவர்கள் 2 பேரும் கோவிலூர் பஸ் நிறுத்தம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டினார்கள். அப்போது கிருஷ்ணசாமி கோவிலூர் அருகே புதுக்காடு பகுதியில் உள்ள தோட்டத்துக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். தங்கம்மாள் மட்டும் வீட்டுக்கு நடந்து சென்றார்.
கத்தி முனையில் மிரட்டல்
இதனை மர்மநபர் ஒருவர் நோட்டமிட்டு வந்துள்ளார். முகத்தில் முகமூடி அணிந்துகொண்டு கத்தியுடன் தங்கம்மாளை பின்தொடர்ந்து சென்றார். தங்கம்மாள் வீட்டு்க்குள் சென்றதும் உள்ளே நைசாக புகுந்துள்ளார்.
பின்னர் திடீரென கத்தியை காட்டி அவரிடம், தாலிசங்கிலியை கழற்றி கொடுக்குமாறு மிரட்டியுள்ளார். அதற்கு அவர் தாலிசங்கிலியை கொடுக்கமாட்டேன் என்று விடாபிடியாக மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மர்மநபர் தான் வைத்திருந்த கத்தியால் தாலிசங்கிலியை அறுக்க முயன்றுள்ளார். இதனை அவர் தடுக்க போராடினார். இதில் அவரது முகத்தில் கத்தி பட்டதில் ரத்த காயம் ஏற்பட்டது. அவர் அலறி துடித்தபடி கீழே சாய்ந்தார்.
தாலிசங்கிலி பறிப்பு
அதைத்தொடர்ந்து அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலிசங்கிலியை பறித்துக்கொண்டு் முகமூடி கொள்ளையன் அங்கிருந்து தப்பி சென்றான். இந்த நிலையில் தோட்டத்துக்கு சென்ற கிருஷ்ணசாமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் தங்கம்மாள் நடந்த விவரங்களை கூறினார். அதன்பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மேலும் இதுகுறித்து தங்கம்மாள் வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
வலைவீச்சு
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.