வீடு புகுந்து 8 பவுன் நகை திருட்டு
தஞ்சையில் வீடு புகுந்து 8 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சை லட்சுமிவதானா நகரை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது50). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு திருச்சிக்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகைகள் இருக்கிறதா? என விவேகானந்தன் தேடி பார்த்தபோது அதில் இருந்த 8 பவுன் நகையை காணவில்லை.
போலீசார் விசாரணை
வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு, பீரோ, சுவர்களில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.