ஓட்டல் ஊழியர் கழுத்தை நெரித்து கொலை

கொடைக்கானலில் ஓட்டல் ஊழியர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-09 01:00 GMT

ஓட்டல் ஊழியர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், மாப்பிள்ளையார் குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி என்ற கலியா (வயது 21), குமரன் (27). இவர்கள் இருவரும், கடந்த சில மாதங்களாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள வாழைக்காட்டு ஓடை பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் ஊழியர்களாக ேவலை பார்த்து வந்தனர்.

அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில தினங்களாக கலியமூர்த்தி, குமரனை பார்க்கும்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. அவர்கள் இருவரும் வேலை பார்க்கும் இடத்தில் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும் தெரிகிறது.

கழுத்தை நெரித்து கொலை

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கலியமூர்த்தி தனியாக பேச வேண்டும் என்று கூறி, குமரனை ஓட்டலுக்கு அருகே உள்ள பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு, நாம் இருவரும் நண்பர்களாகவே இருப்போம், இனிமேல் சண்டைபோட வேண்டாம், சமாதானமாக இருப்போம் என்று கலியமூர்த்தி கூறியுள்ளார். பின்னர் இருவரும் தங்கும் விடுதியின் அருகே அமர்ந்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அதில் ஆத்திரம் அடைந்த குமரன் அங்கு கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து கலியமூர்த்தியின் தலையில் பலமாக தாக்கினார். பின்னர் கயிறு மற்றும் தான் அணிந்து இருந்த பெல்ட்டால் கலியமூர்த்தியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது. பின்பு குமரன் அங்கு இருந்து வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சென்று விட்டார்.

கைது

இதற்கிடையே அந்த பகுதிக்கு சென்ற விடுதி ஊழியர்கள் கலியமூர்த்தி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்பு கலியமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தின்போது குமரனும், கலியமூர்த்தியும் ஒன்றாக பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே அந்த ஓட்டலுக்கு போலீசார் சென்று அறையில் தூங்கி கொண்டிருந்த குமரனை பிடித்து கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமரனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், புதுக்கோட்டை பகுதியில் குமரனுக்கு நெருங்கிய நண்பர் ஒருவரை கலியமூர்த்தி கொலை செய்ய முயன்றதால், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

ஓட்டல் ஊழியர் அடித்து ெகாலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்