ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5½ லட்சத்தை இழந்த ஓட்டல் ஊழியர் தற்கொலை

ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.5½ லட்சத்தை இழந்த ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-06 22:39 GMT

மதுரை,

சேலம் மாவட்டம் முல்லகாடு பகுதியை சேர்ந்தவர் குணசீலன் (வயது 26). இவரது தம்பி பசுபதி. இவர்கள் மதுரை தாசில்தார் நகர், சாத்தமங்கலத்தில் வீடு எடுத்து தங்கியிருந்து ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். ஓய்வு நேரத்தில் குணசீலன் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்தார். கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து ரம்மி விளையாடி வந்ததால் அதன் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

மேலும் அந்த விளையாட்டில் பணத்தை கட்டி அதிகமாக சம்பாதிக்க நினைத்தார். இதனால் அவர் சம்பாதித்த பணத்தை வீட்டிற்கு கூட அனுப்பாமல் அந்த விளையாட்டில் கட்டி விளையாடியதாக கூறப்படுகிறது. இவ்வாறு அவர் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 5½ லட்சம் ரூபாய் வரை இழந்ததாக தெரிகிறது.

ஓட்டல் ஊழியர் தற்கொலை

இதற்கிடையில் குணசீலனின் குடும்பத்தினர் அவரிடம் வீட்டு செலவுக்கு உடனடியாக பணம் அனுப்பும்படி கேட்டு வந்தனர். ஆனால் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் குடும்பத்திற்கு பணம் அனுப்ப முடியவில்லை. இதனை வெளியே சொல்ல முடியாமல் அவர் மன உளைச்சலில் தவித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குணசீலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் ஆன்லைன் ரம்மி விளையாடி அதில் பணம் அதிகமாக இழந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்