இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி ஓசூர் தொழில் அதிபரிடம் ரூ.2.16 கோடி மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி ஓசூர் தொழில் அதிபரிடம் ரூ.2.16 கோடி மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Update: 2022-10-22 18:45 GMT

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி ஓசூரில் தொழில் அதிபரிடம் ரூ.2.16 கோடி மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் ரோடு பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 51). தொழில் அதிபர். மோகன்ராஜ் தொழில் முன்னேற்றத்திற்காக தனது நிறுவன விவரங்கள், தொடர்பு எண்கள் மற்றும் இ-மெயில் விவரங்களை இணையதளம் மூலம் பல்வேறு செயலிகளில் இணைத்து இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி மோகன்ராஜ் இ-மெயிலுக்கு லண்டன் ஓசோமெடிக்பார்ம் என்ற மருந்து கம்பெனியில் இருந்து ஒரு மெயில் வந்தது. அதில் தாங்கள் லண்டனில் மிகப்பெரிய மருந்து கம்பெனி நடத்தி வருவதாகவும், தங்களுக்கு செசிநெல்கோ எனப்படும் விதைகள், மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கு தேவைப்படுவதாகவும், அது இந்தியாவில் உள்ள வனோரோமியா பார்ம்ஸ் என்ற நிறுவனத்தில் கிடைப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் அதற்கான தொடர்பு எண்ணும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

விதைகள் வாங்கினார்

பின்னர் மருந்து கம்பெனியினர் அனுப்பிய மெயிலில் உள்ள செல்போன் எண்ணிற்கு மோகன்ராஜ் தொடர்பு கொண்டார். அவரிடம் பேசியவர்கள் செசிநெல்கோ விதைகளை வாங்கி தந்தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும். முதலில் ஒரு பாக்கெட் வாங்குங்கள் என கூறியுள்ளனர். மோகன்ராஜூம் வனோரோமியா பார்ம்ஸ் நிறுவனத்திற்கு ஆன்லைன் மூலம் சிறிதளவு பணம் அனுப்பினார்.

இதையடுத்து 2 நாட்கள் கழித்து மோகன்ராஜ் முகவரிக்கு விதைகள் வந்துள்ளன. விதைகளை மருந்து கம்பெனி எண்ணிற்கு தொடர்பு கொண்டு வீடியோ காலில் மோகன்ராஜ் காட்டியதாக தெரிகிறது. விதைகள் தரமாக இருப்பதாகவும், மொத்தமாக அவர்களிடம் இருக்கும் விதைகளை வாங்கி விடவும் என லண்டன் மருந்து கம்பெனியினர் கூறினர்.

ரூ.2.16 கோடி அனுப்பினார்

இதை நம்பி மோகன்ராஜ் வனோரோமியா பார்ம்ஸ் அனுப்பிய 13 வங்கி கணக்குகளில் ரூ.2 கோடியே 16 லட்சத்து 59 ஆயிரத்து 500-ஐ அனுப்பினார். அதன் பிறகு லண்டன் மருந்து கம்பெனியினர் மோகன்ராஜிடம் பேசவில்லை. அதே போல வனோரோமியா பார்ம்ஸ் நிறுவனத்தினரும் மோகன்ராஜிடம் பேசவில்லை.

மேலும் எந்த விதைகளும் மோகன்ராஜூக்கு வரவும் இல்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மோகன்ராஜ் கடந்த வாரத்தில் இதேபோன்று மோசடியில் ஈடுபட்டவர்களை கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் பிடித்ததை அறிந்து தன்னை ஏமாற்றியவர்கள் குறித்த விவரங்களுடன் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்