ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.37½ கோடியில் விடுதிகள், பள்ளிக்கட்டிடங்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.37½ கோடியில் கட்டப்பட்ட விடுதிகள், பள்ளிக்கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2022-11-02 22:24 GMT

சென்னை,

2022-23-ம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மதுரை, தேனி, நாகை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ரூ.13.64 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

இதேபோல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள முதுகலை கல்லூரி மாணவிகள் விடுதி கட்டிடம், திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய், காஞ்சீபுரம் மாவட்டம் மவுலிவாக்கம் மற்றும் ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், செங்கல்பட்டு மாவட்டம் குமிழி உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள 3 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளுக்கான கட்டிடங்கள் என மொத்தம் ரூ.37.66 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தாட்கோ அலுவலகம்

மேலும், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் வகையில் அம்மாவட்டங்களின் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தாட்கோ அலுவலகங்களையும் முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கென தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 197 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக, 7 பேருக்கு பணிநியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.

கல்வி ஆணைகள்

இதுதவிர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ஐ.ஐ.டி. மூலம் 'பி.எஸ். டேட்டா சயின்ஸ்' மற்றும் 'அப்ளிகேஷன்ஸ்' படிப்பு, 'எச்.சி.எல்' நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பயில பயிற்சி தொகை, 'இந்தியன் ஹெல்த் கேர்' மூலம் மெடிக்கல் கோடிங் பயிற்சி, ஓட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் மூலம் பி.எஸ்சி. (ஹாஸ்பிட்டாலிட்டி, ஓட்டல் நிர்வாகம்) மற்றும் உணவு உற்பத்தி பட்டயப்படிப்பு, கிராப்ட்மென்ஷிப் ஆகிய வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சிக்கு தேர்வாகியுள்ள 130 மாணவ, மாணவிகளுக்கு ஆணைகளை வழங்கும் அடையாளமாக 9 மாணவ, மாணவிகளுக்கு ஆணைகளையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச்செயலாளர் இறையன்பு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆதிதிராவிடர்நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தாட்கோ தலைவர் உ.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்