நாகர்கோவிலில் மாணவி பலாத்கார வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர் ஆஸ்பத்திரியில் அனுமதி

மாணவி பலாத்கார வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர் ஆஸ்பத்திரியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-01-23 18:31 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் குளிர்பானத்தில் மயங்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதான வாலிபர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவி பலாத்காரம்

நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 22). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த போது சக மாணவி ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் அபிஷேக் காதலை மாணவி ஏற்கவில்லை. எனினும் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்த நிலையில் மாணவியிடம் நைசாக பேசிய அபிஷேக், அவரை நண்பரின் வீட்டுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த காட்சியை அவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் மாணவியிடம், ''இந்த விவகாரத்தை வெளியே சொன்னால், நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோவை சமூகவலைத்தளத்தில் பரப்பி விடுவேன்'' என்று அபிஷேக் மிரட்டி இருக்கிறார்.

போக்சோ சட்டத்தில் கைது

இதனால் நடந்த விஷயத்தை மாணவி வெளியே கூறவில்லை. கல்லூரி படிப்பு முடிந்த பிறகும் கூட அபிஷேக் தொடர்ந்து மாணவியை மிரட்டி வந்துள்ளார். எனவே வேறு வழியின்றி மாணவி தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி நாகா்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு நடந்தது. இதற்கிடையே மாணவி புகார் கொடுத்ததை அறிந்த அபிஷேக் துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்று தலைமறைவாகி விட்டார். எனினும் அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் பாலியல் புகார் விவகாரம் தெரிந்து அபிஷேக்கை, அவருடைய தந்தை வில்சன்குமார் வெளிநாட்டுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வில்சன்குமார் மீதும், அபிஷேக்கின் செயலுக்கு உடந்தையாக இருந்த நண்பர் அனீஸ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இந்த நிலையில் 2½ ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேக் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக அபிஷேக் கூறினார். இதைத் தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்