ரூ.20 லட்சம் மதிப்பில் செவித்திறன் பரிசோதனை அறை
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.20 லட்சம் மதிப்பில் செவித்திறன் பரிசோதனை அறை திறக்கப்பட்டது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.20 லட்சம் மதிப்பில் செவித்திறன் பரிசோதனை அறை திறக்கப்பட்டது.
அரசு ஆஸ்பத்திரி
தென் மாவட்டத்தில் மிக முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர். இதுபோல், ஆயிரக்கணக்கானவர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து வித சிகிச்சைகளும் சிறப்பாக அளிப்பதால் நாளுக்குநாள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியின் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் செவித்திறன் பரிசோத னைக்காக நவீன வசதிகளுடன் அறை திறக்கப்பட்டது. துறை தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த புதிய அறையை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் அருள் சுந்தரேஷ்குமார், ராதாகிருஷ்ணன், செவித்திறன் நிபுணர் கார்த்திகேயன், மருத்துவ இருப்பிட அதிகாரிகள் ரவீந்திரன், ஸ்ரீலதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ரூ.20 லட்சம் மதிப்பு
இதுகுறித்து துறை தலைவர் தினரகன் கூறுகையில், தென் மாவட்டத்தில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக ரூ.20 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட செவித்திறன் பரிசோதனை அறை திறக்கப்பட்டு உள்ளது. ஒரு அறையில் நோயாளிகள் அமரும் வகையிலும், மற்றொரு அறையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்யும் வகையில் இரு அறைகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் பரிசோதனை முடிவுகளை துல்லியமாக பெற முடியும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனை வருக்கும் சிறப்பான முறையில் செவித்திறன் பரிசோதனை செய்யலாம்.
இதுமட்டுமின்றி செவித்திறனின் பாதிப்பு எந்த நரம்புகளில் எந்த அளவுகளில் உள்ளது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரையில் இந்த செவித்திறன் பரிசோதனை அறை அமைவது தென் மாவட்ட மக்களுக்கு வரபிரசாதம். இதன் மூலம் சென்னைக்கு நோயாளிகளை சிறப்பு பரிசோதனைக்காக அனுப்பி வைக்க வேண்டாம்.
இங்கேயே அனைத்து வித பரிசோதனைகளையும் துல்லியமாக செய்ய முடியும். இதுபோல், செவித்திறன் குறித்த பி.எஸ்.சி. ஸ்பீச் அன்ட் லாங்குவேஞ் தெரபி பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் இந்த அறை பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.