தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
ஊதிய உயர்வு கோரி தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
ஊதிய உயர்வு கோரி தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டம்
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23-ந் தேதி முதல் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தோட்டக்கலைத்துறையில் தினக்கூலியாக 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தோட்டக்கலைத்துறையில் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு தினசரி ரூ.400 ஆக உள்ள ஊதியத்தை ரூ.700 ஆக உயர்த்த வலியுறுத்தி மரத்திடம் மனு கொடுத்தும், குட்டை தண்ணீரில் இறங்கியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம்
இந்தநிலையில் தோட்டக்கலைத்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. தோட்டக்கலைத்துறை ஊழியர்களின் சில கோரிக்கைகளை மட்டுமே ஏற்க வாய்ப்பு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி விட்டது. இதனால் ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்தனர்.
இதன்படி நேற்று தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூங்காக்களில் ஏராளமான ஊழியர்கள் கையில் தட்டுகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். இதை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து போராட்டம் குறித்து விசாரித்தனர்.
தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாவட்டத்தில் உள்ள 8 பூங்காக்களிலும், மலர் செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது, குப்பைகளை அகற்றுவது உள்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.