முந்திரி மரங்களை தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு

‘தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கொள்ளிடம் பகுதியில் பனியால் பாதிக்கப்பட்ட முந்திரி மரங்களை தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

Update: 2023-04-24 18:45 GMT

கொள்ளிடம்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கொள்ளிடம் பகுதியில் பனியால் பாதிக்கப்பட்ட முந்திரி மரங்களை தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

முந்திரி சாகுபடி பாதிப்பு

கொள்ளிடம் பகுதியில் வேட்டங்குடி, தொடுவாய், கண்ணாங்குளம், தாண்டவன்குளம், தற்காஸ், எடமணல், கடவாசல், உள்ளிட்ட பகுதிகளில் முந்திரி பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு காலம் தவறி பெய்த மழை மற்றும் தொடர் பனிபொழிவின் காரணமாக முந்திரி மரங்களில் பூக்கள் கருகியது.

கடந்த சில ஆண்டுகளாக கொள்ளிடம் பகுதிக்கு பண்ருட்டி மற்றும் சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து முந்திரியை வாங்கி சென்றனர். ஆனால் இந்த ஆண்டு முந்திரி சாகுபடியில் மகசூல் குறைந்ததால் முந்திரி விலை அதிகரித்தது. இதனால் வெளியூர்களில் இருந்து குறைந்த அளவு வியாபாரிகள் கொள்ளிடம் வந்து முந்திரியை வாங்கி செல்கின்றனர்.

தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு

முந்திரி மகசூல் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். பாதிக்கப்பட்ட முந்திரி மரங்களை வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 20-ந்தேதி செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தலின்படி மயிலாடுதுறை தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ரமேஷ், நாகை தோட்டக்கலை துணை இயக்குனர் கண்ணன், கொள்ளிடம் வட்டார தோட்டக்கலை அலுவலர் செல்வராஜ் மற்றும் உதவி அலுவலர்கள் நேற்று வேட்டங்குடி கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட முந்திரி மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் விவசாயிகளுக்கு காய்ப்பு திறனைமேம்படுத்தும் வகையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் காய்ப்பு திறனை அதிகரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்