தோட்டக்கலை துறை ஊழியர்கள் 14-வது நாளாக தொடர் போராட்டம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் நேற்று 14-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-04 18:45 GMT

ஊட்டி

ஊட்டி தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் நேற்று 14-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் போராட்டம்

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு தினசரி ரூ.400 ஆக உள்ள ஊதியத்தை ரூ.700 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த 23-ந் தேதி முதல் தோட்டக்கலை துறை ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தினசரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரதம்

இந்த நிலையில் தோட்டக்கலைத் துறை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால், தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று உண்ணாவிரதம், கஞ்சி தொட்டி திறப்பு மற்றும் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்புதல் என முத்தரப்பு போராட்டத்தை கையில் எடுத்தனர். இதன்படி ஊழியர்கள் அனைவரும் கையெழுத்திட்டு முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பினர்.

மலர் கண்காட்சி நடக்குமா?

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணாவிட்டால் மலர்கண்காட்சி தடையில்லாமல் நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளதாக உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

ஒப்பந்த முறையில் பணியாளர்களை நியமிக்க ஆலோசனை

தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் போராட்டத்தால் தினசரி பூங்கா பணிகள் முடங்கி கிடக்கிறது. மேலும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. தோட்டக்கலை துறை ஊழியர்களின் ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்ற பரிசீலனை செய்வதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் தான் பணிக்கு திரும்புவோம் என்று ஊழியர்கள் உறுதியாக தெரிவித்து விட்டனர். இதனால் மலர் கண்காட்சியை ஒப்பந்த முறையில் பணியாளர்களை வைத்து நிறைவேற்றலாமா என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

தாவரவியல் பூங்காவில் குப்பைகளை அகற்றிய அதிகாரிகள்

ஊழியர்கள் போராட்டத்தால் தாவரவியல் பூங்காவில் தினசரி பணிகள் தடைபட்டுள்ளது. புல்வெளி மைதானத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த நிலையில் சீசன் தொடங்கி இருப்பதால் தினசரி 8 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தற்போது தாவரவியல் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர்.

பூங்கா ஊழியர்கள் கோரிக்கை குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு கலெக்டர் மூலமாக அறிக்கையை அனுப்பி உள்ளனர். ஆனால் இதுவரை தமிழக அரசு இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் வேறு வழியில்லாமல், என்ன செய்வது என்று தெரியாமல் அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் உள்ள குப்பைகளை அதிகாரிகளை அகற்றி வருகின்றனர்.

நேற்று காலை 8 மணி அளவில் மழைக்கு மத்தியில் குடைகளை பிடித்தவாறு உதவி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், பாலசங்கர், அனிதா மற்றும் அதிகாரிகள் குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்