பொங்கல் பண்டிகையையொட்டிகுதிரை ரேக்ளா பந்தயம்ஆத்தூரில் நடந்தது

பொங்கல் பண்டிகையையொட்டி ஆத்தூரில் குதிரை ரேக்ளா பந்தயம் நடந்தது.;

Update: 2023-01-17 19:57 GMT

ஆத்தூர், 

ரேக்ளா பந்தயம்

பொங்கல் பண்டிகையையொட்டி, ஆத்தூர் உடையார்பாளையம் நண்பர்கள் குழு சார்பில் 34-ம் ஆண்டு குதிரை ரேக்ளா பந்தயம் நடந்தது. போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஆர்.வி. ஸ்ரீராம் தலைமை தாங்கினார். உடையார்பாளையம் நண்பர்கள் குழு செயலாளர் ஆர்.அருமை நாயகம் வரவேற்று பேசினார்.

குதிரை ரேக்ளா பந்தயத்தை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் தொடங்கி வைத்து பேசினார். இந்த பந்தயத்தில் கரூர், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான குதிரைகள் கலந்து கொண்டன.

கோவை குதிரை முதலிடம்

பெரிய குதிரைகளுக்கான போட்டி, சிறிய குதிரைகளுக்கான போட்டி என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது. இதில் பெரிய குதிரைகளுக்கான போட்டியானது ஆத்தூர்-கொட்டாம்பாடி வரையில் சுமார் 11 கிலோமீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட்டது.

இதில், கோவை பாமா கண்ணு சரவணன் என்பவரின் குதிரை முதல் பரிசான ரூ.25 ஆயிரத்தை தட்டிச்சென்றது. இந்த பிரிவில், ஆத்தூர் முருகன், மாணிக்கம், ரமேஷ் ஆகியோரின் குதிரைகள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.

சிறிய ரக குதிரைக்கான பந்தயம்

சிறிய ரக குதிரைகளுக்கான ரேக்ளா பந்தயம் ஆத்தூர்-பழனியாபுரி இடையே 7 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. இதில் முதல் பரிசை கோவை நவீன் பிரதர்ஸ் குதிரை வென்றது. இந்த குதிரையின் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. ஆத்தூர் ஏ.வி.எம்., திருச்சி சங்கேந்தி கருப்பன், சேலம் பெரியாண்டிச்சி அம்மன் ஆகியோரின் குதிரைகள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.

இந்த பந்தயத்தை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கண்டு ரசித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்