வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் குதிரை வண்டி பந்தயம்
வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அனுமதியின்றி நடைபெறும் குதிரை வண்டி பந்தயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குதிரை வண்டி பந்தயம்
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் இருந்து வாணியம்பாடிக்கும், வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் வரைக்கும் தனித்தனியாக குதிரை வண்டிகளில் பந்தயம் கட்டி வண்டிகளை ஓட்டுகின்றனர். இவர்களுடன் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் பவனி வருகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் இங்கும் அங்கும் சென்று விபத்துக்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் இந்த பந்தயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட தூரம்வரை அதிக வேகமாக குதிரை வண்டி ஓட்டிச்செல்லும் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
நடவடிக்கை
அனுமதியின்றி நடைபெறும் இந்த குதிரை வண்டி பந்தயத்தை வாணியம்பாடி, ஆம்பூர், அம்பலூர், நாட்டறம்பள்ளி பகுதி போலீசார் கண்டும் காணாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள், 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் பவனி வருவதால், வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும்நிலை ஏற்படுகிறது. எனவே இவர்கள் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுத்து இத்தகைய பந்தயங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.