ஸ்ரீரங்கம் அருகே கோர விபத்து: நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறி 3 பேர் பலி -வாலிபர் கைது
ஸ்ரீரங்கம் அருகே நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் யாசகம் பெறுவதற்காக அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலையோரம் தங்கி உள்ளனர். இவர்கள் இரவு நேரத்தில் அங்கு சாலையோர நடைபாதையில் படுத்து தூங்குவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் அம்மாமண்டபத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி கார் ஒன்று வேகமாக சென்று கொண்டு இருந்தது. தாறுமாறாக ஓடிய அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீதாபுரம் அருகே தனியார் திருமணமண்டபம் எதிரே நடைபாதையில் தூங்கிக்கொண்டு இருந்த யாசகர்கள் மீது ஏறி இறங்கியது. மேலும், அங்கிருந்த மேற்கூரை இரும்புத்தூணையும் இடித்து தள்ளியது.
இதில் சாலையோரம் படுத்து இருந்தவர்கள் படுகாயம் அடைந்து அலறி துடித்தனர். ஆனாலும் அந்த கார் நிற்காமல் 500 மீட்டர் தொலைவு சென்று அங்குள்ள சந்து பகுதியில் திரும்பியது. இதைக்கண்ட பொதுமக்கள் விரட்டிச்சென்று காரில் இருந்த 2 பேரை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் கார் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர்.
3 பேர் பலி
இதற்கிடையே கார் ஏறி இறங்கியதில் 70 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அனுமதிக்கப்பட்ட 2 பேரும் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காரை ஓட்டி வந்தது காந்திமார்க்கெட் பகுதியை சேர்ந்த லெட்சுமிநாராயணன் (வயது 24) என்பதும், உடன் வந்தவர் அதேபகுதியை சேர்ந்த அஸ்வந்த் என்பதும் தெரியவந்தது.
வாலிபர் கைது
அஸ்வந்திற்கு கார் ஓட்டி பழகி கொடுப்பதற்காக இவர்கள் காரில் பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு அம்மாமண்டப பகுதிக்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லெட்சுமி நாராயணனை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே காரின் டயர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக காரை ஓட்டி வந்தவர்கள் தெரிவித்தனர். விபத்தில் இறந்த 3 பேர் யார்? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. அவர்கள் யாசகம் பெற்று பிழைத்து வந்ததால், அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் எங்கு இருக்கிறார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.